தொடரை வெல்லுமா இந்தியா * ஆப்கனுடன் இன்று 2வது மோதல்
தொடரை வெல்லுமா இந்தியா * ஆப்கனுடன் இன்று 2வது மோதல்
ADDED : ஜூன் 16, 2026 11:38 PM

லக்னோ: இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இன்று, லக்னோவில் உள்ள வாஜ்பாய் மைதானத்தில் 2வது போட்டி நடக்கிறது. இதில் இந்தியா அசத்தினால், தொடரை வெல்லலாம்.
முதல் போட்டியில் ஏமாற்றிய ‛சீனியர்' ரோகித் சர்மா (16) இன்று எழுச்சி கண்டால் நல்ல துவக்கம் கிடைக்கும். கேப்டன் சுப்மன் கில் (84) மீண்டும் கைகொடுக்கலாம். 3வது இடத்தில் களமிறங்கும் இஷான் கிஷான் (34) நம்பிக்கை தருகிறார். ‛மிடில்-ஆர்டரில்' ஷ்ரேயஸ் ஐயர், கே.எல். ராகுல் ரன் மழை பொழியலாம்.
‛வேகத்தில்' அர்ஷ்தீப் சிங் (2 விக்.,) நம்பிக்கை தருகின்றார். முதல் போட்டியில் 3 விக்கெட் கைப்பற்றிய குர்னுார் பிரார் இன்றும் மிரட்ட காத்திருக்கிறார். 'சுழலில்' ஹர்ஷ் துபே (3 விக்.,) பலம் சேர்க்கிறார். நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் ‛ஆல்-ரவுண்டராக' ஜொலித்தால் சுலப வெற்றி பெறலாம்.
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலக கோப்பை தொடருக்கு முன், சிறந்த ‛லெவன்' அணியை கண்டறிய பயிற்சியாளர் காம்பிர் விரும்புவார். இன்று ‛லெவன்' அணியில் மாற்றம் செய்யப்படலாம். துவக்க வீரர் ஜெய்ஸ்வால், சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தேர்வாகலாம்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு துவக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் (102) நம்பிக்கை தருகிறார். இப்ராஹிம் ஜத்ரன், செதிகுல்லா அடல், ரஹ்மத் ஷா, கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாகிதி, அஸ்மதுல்லா ஓமர்சாய் ஆறுதல் தருகின்றனர்.
‛வேகத்தில்' ஜியா உர் ரஹ்மான் ஓரளவு கைகொடுக்கிறார். ‛சுழலில்' அனுபவ ரஷித் கான் அசத்தலாம்.
இதுவரை
ஒருநாள் போட்டி அரங்கில் இவ்விரு அணிகள் மோதிய 5 போட்டியில், இந்தியா 4ல் வென்றது. ஒரு போட்டி (2018) ‛டை' ஆனது.
மழை வருமா
லக்னோவில் மழை வரை வாய்ப்பு இல்லை.
* லக்னோ, வாஜ்பாய் மைதான ஆடுகளம் ‛சுழலுக்கு' ஒத்துழைக்கும்.
