/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஆப்கானிஸ்தான் அபார வெற்றி * ஹாங்காங் அணியை வீழ்த்தியது
/
ஆப்கானிஸ்தான் அபார வெற்றி * ஹாங்காங் அணியை வீழ்த்தியது
ஆப்கானிஸ்தான் அபார வெற்றி * ஹாங்காங் அணியை வீழ்த்தியது
ஆப்கானிஸ்தான் அபார வெற்றி * ஹாங்காங் அணியை வீழ்த்தியது
ADDED : செப் 09, 2025 11:59 PM

அபுதாபி: ஆசிய கோப்பை முதல் லீக் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி, 94 ரன் வித்தியாசத்தில் ஹாங்காங்கை வீழ்த்தியது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை 'டி--20' தொடர் நேற்று துவங்கியது. இந்தியா, இலங்கை உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. அபுதாபியில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் பேட்டிங் தேர்வு செய்தார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மானுல்லா குர்பாஸ், செதிகுல்லா அடல் ஜோடி துவக்கம் தந்தது. ஷுக்லா வீசிய 2வது ஓவரின் முதல் பந்தில் ரஹ்மானுல்லா சிக்சர் அடித்தார். அடுத்த பந்திலும் சிக்சருக்கு ஆசைப்பட்ட இவர், 8 ரன்னில் நிஜகத் கானிடம் 'பிடி' கொடுத்தார். இப்ராஹிம் ஜத்ரன், 1 ரன் மட்டும் எடுத்து வெளியேறினார். ஆப்கானிஸ்தான் அணி 6 ஓவரில் ('பவர் பிளே'), 41/2 ரன் எடுத்தது.
பின் செதிகுல்லாவுடன், 40 வயது 'சீனியர்' முகமது நபி இணைந்தார். அஜாஸ் கான் வீசிய போட்டியின் 7வது ஓவரில் தலா ஒரு பவுண்டரி, சிக்சர் என விளாசினார் முகமது நபி. மீண்டும் வந்த அஜாஸ் கான் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்தார். முகமது நபி 26 பந்தில் 33 ரன் எடுத்த நிலையில் கின்சிட் ஷா வீசிய பந்தில் அவுட்டாகினார்.
ஓமர்சாய் அரைசதம்
குல்பதீன் (5) நிலைக்கவில்லை. அடுத்து வந்த அஸ்மதுல்லா ஓமர்சாய் வேகமாக ரன் சேர்த்தார். சிக்சர் மழை பொழிந்த இவர் 21 பந்தில் 53 ரன் எடுத்து, ஷுக்லா பந்தில் அவுட்டானார். ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 188/6 ரன் எடுத்தது. அரைசதம் அடித்த செதிகுல்லா (73), ரஷித் கான் (3) அவுட்டாகாமல் இருந்தனர். ஹாங்காங் சார்பில் ஆயுஷ் ஷுக்லா, கின்சிட் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
ஹாங்காங் அணிக்கு ஜீஷன் அலி (5), அன்ஷி (0) ஜோடி மோசமான துவக்கம் தந்தது. நிஜகத் (0), கல்ஹான் (4) நிலைக்கவில்லை. பாபர் ஹயாத் அதிகபட்சம் 39 ரன் எடுத்தார். கேப்டன் யாசிம் முர்டசா 16 ரன் எடுத்து திரும்பினார். ஹாங்காங் அணி 20 ஓவரில் 94/9 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.
ரஷித் கான் புலம்பல்
ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர், கேப்டன் ரஷித் கான் கூறியது:
நாங்கள் அனைவரும் துபாயில் தங்கி உள்ளோம். ஆனால் எங்களது மூன்று போட்டிகளும் அபுதாபியில் நடப்பது சரியல்ல. இதற்காக சுமார் இரண்டு மணி நேரம் பயணம் செய்தாக வேண்டும்.
என்ன செய்ய... தொழில் ரிதியிலான கிரிக்கெட் வீரர்கள் என்று வரும் போது, இவற்றை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். இருப்பினும் மைதானத்திற்குள் நுழைந்தவுடன், மற்ற விஷயங்கள் அனைத்தும் மறந்து விட வேண்டும்.
முன்பு ஒருமுறை வங்கதேசத்தில் இருந்து அமெரிக்கா சென்று, நேரடியாக போட்டியில் பங்கேற்றது தான் நினைவுக்கு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
41 டிகிரி
அபுதாபியில் ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை துவங்கிய போது, சூரியன் மறைந்து இரவு துவங்கியது. எனினும் வெப்பநிலை 41 டிகிரி செல்சியசாக வீரர்களை மூச்சை திணறச் செய்தது.