/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
அபிஷேக் ஆட்டம் ஆரம்பம்: அஷ்வின் ஆருடம்
/
அபிஷேக் ஆட்டம் ஆரம்பம்: அஷ்வின் ஆருடம்
ADDED : செப் 22, 2025 11:05 PM

புதுடில்லி: ''அபிஷேக் சர்மாவின் ஆட்டம் இப்போது தான் ஆரம்பமாகியுள்ளது. கிரிக்கெட் உலகையே வியக்க வைக்க காத்திருக்கிறார்,''என அஷ்வின் தெரிவித்தார்.
ஐக்கிய எமிரேட்சில் ஆசிய கோப்பை தொடர் (டி-20) நடக்கிறது. இதில் இந்தியாவின் துவக்க வீரர் அபிஷேக் சர்மா மிரட்டுகிறார். எதிரணி பந்துவீச்சை துவம்சம் செய்யும் இவர், இதுவரை 4 போட்டியில் 173 ரன் (சராசரி 43.25, ஸ்டிரைக் ரேட் 208.43) குவித்து முதலிடத்தில் உள்ளார். 17 பவுண்டரி, 12 சிக்சர் விளாசியுள்ளார்.
யுவராஜ் வழியில்: இது பற்றி இந்திய அணியின் முன்னாள் 'ஸ்பின்னர்' அஷ்வின் கூறுகையில்,''அபிஷேக் ஆதிக்கம் இப்போது தான் ஆரம்பமாகியுள்ளது. சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது. தனது அதிரடி பேட்டிங்கால் கிரிக்கெட் உலகை வியக்க வைக்க போகிறார். எழுதி வைத்துக் கொள்ளுங்கள்... 'ஒயிட் பால்' போட்டிகளில் யுவராஜ் சிங் போல நிச்சயம் பிரகாசிப்பார். இவரது பாரம்பரியத்தை தொடரும் ஆற்றல் அபிஷேக்கிடம் உண்டு. தோனி மாதிரி 'ஹெலிகாப்டர் ஷாட்' சிக்சர் அடிக்கிறார். சூழ்நிலைக்கு ஏற்ப 'அட்ஜெஸ்ட்' செய்து கொண்டு அற்புதமாக பேட் செய்கிறார். இவரது ஆட்டத்தை நாள் முழுவதும் பார்த்துக் கொண்டிக்கலாம்,''என்றார்.
துணிச்சல் வீரர்: இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பீட்டர்சன் கூறுகையில்,''அபிஷேக் ஆட்டம் வேற லெவல். அஞ்சாமல் பேட் செய்கிறார். உலகின் அனைத்து பவுலர்களையும் விளாசும் திறன் இருப்பதால், கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்வார். பந்துகளை துல்லியமாக பார்த்து அடிக்கும் இவரது திறமையை பாராட்டலாம்,''என்றார்.
சரியான பதிலடி: அபிஷேக் சர்மா கூறுகையில்,''பள்ளி காலத்தில் இருந்து நானும் சுப்மனும் ஒன்றாக விளையாடுகிறோம். எங்களுக்குள் நல்ல புரிதல் இருப்பதால், வலுவான துவக்கம் தர முடிகிறது. கடந்த போட்டியில் எவ்வித காரணமும் இல்லாமல் எதிரணி வீரர்கள் சீண்டினார்கள். இது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதற்கு ஆக்ரோஷமான 'பேட்டிங்' மூலம் பதிலடி கொடுத்தேன்,''என்றார்.
நெருப்பும்... பனியும்
இந்திய கேப்டன் சூர்யகுமார் கூறுகையில்,''அபிஷேக்-சுப்மன் கூட்டணி நெருப்பும் பனியும் போன்றது. அபிஷேக் எடுத்த எடுப்பிலேயே விளாசுவார். சுப்மன் போகப் போக அதிவேகமாக ரன் சேர்ப்பார். இவர்கள் சிறப்பான துவக்கம் தருவதால், அடுத்து வரும் வீரர்களின் பணி எளிதாகிறது. கடந்த போட்டியை பெரும் மோதலாக குறிப்பிடுகின்றனர். புள்ளிவிபரத்தை பார்த்தால் 15 'டி-20' போட்டிகளில் இந்தியா 12ல் வென்று ஆதிக்கம் செலுத்துகிறது. எதிரணி 3ல் தான் வென்றுள்ளது. 8-7 என்ற கணக்கில் இருந்தால் கூட, கடும் போட்டி எனலாம். இந்தியாவுக்கு போட்டியே இல்லை,''என்றார்.