ADDED : பிப் 15, 2024 10:59 PM

ஷா ஆலம்: ஆசிய அணிகளுக்கான பாட்மின்டனில் இந்திய ஆண்கள் அணி, 2-3 என சீனாவிடம் தோல்வியடைந்தது.
ஆசிய பாட்மின்டன் அணிகளுக்கான சாம்பியன்ஷிப் தொடரின் ஐந்தாவது சீசன் மலேசியாவில் நடக்கிறது. 15 அணிகள் மோதுகின்றன. 'டபிள்யு' பிரிவில் இடம் பெற்ற இந்திய பெண்கள் அணி, சீனாவை வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
'ஏ' பிரிவில் இடம் பெற்ற இந்திய ஆண்கள் அணி, முதல் போட்டியில் ஹாங்காங்கை வீழ்த்தி, காலிறுதியை உறுதி செய்தது. நேற்று தனது இரண்டாவது, கடைசி லீக் போட்டியில் சீனாவை சந்தித்தது.
முதலில் நடந்த முதல் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் பிரனாய், 6-21, 21-18, 21-19 என்ற கணக்கில் வெங் ஹாங்கை போராடி வீழ்த்தினார்.
பின் நடந்த இரட்டையர் போட்டியில் இந்தியாவின் துருவ் கபிலா, அர்ஜுன் ஜோடி 15-21, 21-19, 19-21 என போராடி தோற்றது. இரண்டாவது ஒற்றையர் போட்டியில் லக்சயா சென், 21-11, 21-16 என, லெய் லானை வீழ்த்தினார். இரண்டாவது இரட்டையர் போட்டியில் சுராஜ், புருத்வி ஜோடி 13-21, 9-21 என தோல்வியடைய, ஸ்கோர் 2-2 என ஆனது.
கடைசியாக நடந்த 3வது ஒற்றையர் போட்டியில் இந்திய வீரர் சிராக் சென், 15-21, 16-21 என வீழ்ந்தார். முடிவில் இந்திய அணி 2-3 என தோல்வியடைந்தது.
