/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சட்டசபை பதவிகள் நிரந்தரமாக நிரப்பப்படுமா?: சபாநாயகரின் நடவடிக்கை தேவை
/
சட்டசபை பதவிகள் நிரந்தரமாக நிரப்பப்படுமா?: சபாநாயகரின் நடவடிக்கை தேவை
சட்டசபை பதவிகள் நிரந்தரமாக நிரப்பப்படுமா?: சபாநாயகரின் நடவடிக்கை தேவை
சட்டசபை பதவிகள் நிரந்தரமாக நிரப்பப்படுமா?: சபாநாயகரின் நடவடிக்கை தேவை
ADDED : மே 02, 2025 04:57 AM

புதுச்சேரி: சட்டசபையில் முக்கிய பதவிகள் அனைத்தும் நிரந்தரமாக நிரப்பாமல் பல ஆண்டுகளாக காலியாகவே போடப்பட்டுள்ளது. இந்த பதவிகளை சபாநாயகர் நிரப்பி, சட்டசபையின் பெருமையை நிலை நாட்ட வேண்டும்.
புதுச்சேரி சட்டசபையில் சட்டசபை செயலர், ஜூனியர் தமிழ் ஸ்டெனோகிராபர், தமிழ், ஆங்கில ரிப்போர்ட்டர், ரெபரென்ஸ் ஆபிசர், விவாத பதிவாளர் என முக்கிய பதவிகள் பல உள்ளன. இவர்கள் தான், சட்டசபை இயங்க கண்களுக்கு தெரியாத வேர்களாக உள்ளனர். சட்டசபை கூடும்போதெல்லாம் இவர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர். முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் பேசும்போது, அவற்றை குறிப்பெடுத்து தொகுத்து ஆவணமாக்குகின்றனர். இதேபோல், சட்டசபை கேள்வி குழு, உரிமை குழு என பல்வேறு குழுக்கள் உள்ளன. இந்த குழுக்கள் கூடும்போதும் பங்கேற்று, அதில் எடுக்கப்படும் முடிவுகளை ஆவணமாக்க பதிவு செய்கின்றனர்.
இந்த முக்கிய பதவிகள் அனைத்தும் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. சில பதவிகள் 15 ஆண்டுகள் கூட காலியாகவே கிடக்கின்றது. இதனால், சட்டசபை கூடும்போது, அவசரத்திற்கு பிறகு துறைகளில் உள்ள சுருக்கெழுத்தர்கள் கடன் வாங்கிக்கொண்டு, சட்டசபை நிகழ்வுகள் நடக்கும் வரை சமாளித்துவிட்டு திருப்பி அனுப்பி விடுகின்றனர். பல ஆண்டுகளாக இப்படி தான் நிரந்தர பதவிகள் நிரப்பபடாமல் இரவல் பெற்று சமாளிக்கப்பட்டு வருகின்றது. இப்போது கடைசியாக இருந்த விவாத பதிவாளர் அலமேலும் கடந்த மாதத்துடன் ஓய்வு பெற்றுவிட மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் சட்டசபை பதவிகள் மிக முக்கிய பதவிகளாக கருதப்படுகின்றன. நியமன விதிகளை அவ்வப்போது திருத்தி அவற்றை காலத்தோடு நிரப்புகின்றனர். இதனால், சுருக்கெழுத்தராக பதவி பெற்றவர்கள் அடுத்தடுத்து உயர் பதவி பெற்று உயர்நிலைக்கு சென்றுவிடுகினறனர். ஆனால் புதுச்சேரி சட்டசபையில் மட்டும் நிரந்தரமாக பதவிகள் நிரப்பாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ஆட்சியாளர்கள் வருவார்கள்;போவார்கள். முதல்வர், அமைச்சர்கள், ஏன் சபாநாயாகர் கூட மாறுவார்கள். ஆனால் சட்டசபை, யார் வந்தாலும் நிரந்தரமாக இருக்கும்.
புதிதாக வரும் ஆட்சியாளர்களுக்கு சட்டசபை அதிகாரிகள் தான் உறுதுணையாக இருப்பர். இப்பதவிகள் நிரந்தரமாக நிரப்பாமல் பல ஆண்டுகளாக காலியாக கிடப்பது எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல. இது நிர்வாகத்தில் தேக்கத்தையே ஏற்படுத்தும்.
புதுச்சேரி சட்டசபைக்கென்று தனி மாண்புகள் உண்டு. புதுச்சேரி சட்டசபையில் ஆட்சி கவிழ்ப்பு, நேரில் விசாரணை, பல வரலாற்று நிகழ்வுகள் அரங்கேறியுள்ளது. இதுபோன்ற முக்கிய பிரச்னைகள் எழும்போதெல்லாம், சட்டசபையில் ஆணவப்படுத்தும் அதிகாரிகளை அழைத்து ஆட்சியாளர்கள் ஆலோசனை பெற்று நல்ல முடிவுகளை எடுப்பது வழக்கம்.
ஆனால், இரவலாக வந்தவர்கள், சீசன் பறவையாக தாய் துறைக்கு மீண்டும் திரும்பிவிடும்போது, வரலாற்று நிகழ்வுகளில் ஆலோசனை கிடப்பதிலும் இனி சிக்கல் தான் ஏற்படும். சபாநாயகர் செல்வம் பொறுப்பேற்ற பிறகு புதுச்சேரி சட்டசபையில் பல்வேறு சீர்த்திருத்தங்களை கொண்டு வந்துள்ளார். காகித முறைக்கு 'குட்'-பை சொல்லிவிட்டு, காகிதமில்லாத நடைமுறையை புகுத்தியுள்ளார் பல கோடி செலவில் சட்டசபையுடன் ஒருங்கிணைந்த சட்டசபையை கட்டவும் முயற்சி எடுத்து வருகின்றார். விரைவில் தேசிய அளவிலான சபாநாயகர் மாநாட்டினை புதுச்சேரியில் நடத்தவும் முயற்சியெடுத்து வருகின்றார்.
இதுபோன்ற சூழ்நிலையில் நியமன விதிகளை காலத்தோடு திருத்தி சட்டசபையில் காலியாக உள்ள அனைத்து பதவிகளையும் நிரந்தரமாக நிரப்பி சட்டசபையில் பெருமையை சபாநாயகர் காக்க வேண்டும்.

