/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லோக்சபா தேர்தலில் 2.2 லட்சம் இளைஞர்கள் ஓட்டு யாருக்கு?: கணிக்க முடியாமல் அரசியல் கட்சிகள் திணறல்
/
லோக்சபா தேர்தலில் 2.2 லட்சம் இளைஞர்கள் ஓட்டு யாருக்கு?: கணிக்க முடியாமல் அரசியல் கட்சிகள் திணறல்
லோக்சபா தேர்தலில் 2.2 லட்சம் இளைஞர்கள் ஓட்டு யாருக்கு?: கணிக்க முடியாமல் அரசியல் கட்சிகள் திணறல்
லோக்சபா தேர்தலில் 2.2 லட்சம் இளைஞர்கள் ஓட்டு யாருக்கு?: கணிக்க முடியாமல் அரசியல் கட்சிகள் திணறல்
ADDED : ஏப் 11, 2024 03:47 AM

புதுச்சேரி லோக்சபா தேர்தலில் காங்.,பா.ஜ.,அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி என நான்குமுனை போட்டி ஏற்பட்டுள்ளது.
நான்கு கட்சி வேட்பாளர்களும், கூலி தொழிலாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், வியாபாரிகள், விவசாயிகள் என பலதரப்பட்ட மக்களையும் கவரும் விதத்தில், நாட்டில் நல்லாட்சி மலர, தங்களுக்கு வாய்ப்பு தருமாறு, ஒவ்வொரு கட்சியினரும், பிரசார வேன்களில் சென்று ஆதரவு கேட்டு வருகின்றனர்.
இளைஞர் சக்தி
புதுச்சேரி லோக்சபா தேர்தலில் மொத்தமுள்ள 10 லட்சத்து 23 ஆயிரத்து,699 ஓட்டுகளில் இளைஞர்கள் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளனர்.குறிப்பாக 29 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் மட்டும் 2 லட்சத்து 21 ஆயிரத்து 309 பேர் உள்ளனர்.அதாவது மொத்த வாக்காளர்களில் 21.61 சதவீதம் இளைஞர்களாக உள்ளனர்.இவர்களில் 20-29 வயதிற்குள் 1,92,388 பேரும்,18-19 வயதிற்குள் முதல் முறையாக ஓட்டினை பதிவு செய்ய 28,921 பேரும் காத்திருக்கின்றனர்.
இவர்கள், லோக்சபா தேர்தலில் யாரை வெற்றி பெற வைப்பது என்பதை முடிவு செய்யும் சக்தியாக இளைஞர்கள் உருவெடுத்துள்ளனர்.
இந்த லோக்சபா தேர்தலில் துருப்பு சீட்டு இளைஞர்கள் கையில் உள்ளது.இந்த இளைஞர்களின் ஓட்டு யாருக்கு என கணிக்க முடியாமல் அரசியல் கட்சியினர் திணறி வருகின்றன.
மத்திய-மாநில அரசு விஷயத்தில் இன்றைய இளைஞர்களிடம் தெளிவான புரிதல் உள்ளது.
மத்தியில் அமையும் ஆட்சி, ஊழல் அற்றதாக, நேர்மையானதாக இருக்க வேண்டும்; மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்தி செயல்பட வேண்டும்.
ஊழல், முறைகேடு செய்யும் மக்கள்பிரதிநிதிகளை உடனடியாக வெளியேற்ற வேண்டும்; இலவசங்களை தந்து, மக்களை ஏமாற்றக் கூடாது என்பது பெரும்பாலான இளைஞர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.ஆனால், பல இளைஞர்களிடம் எந்த கட்சி மீதும் பெரிய அபிமானம் இல்லை.
அதனால், நோட்டாவுக்கு ஓட்டு என்பதில், ஒரு தரப்பு இளைஞர்கள் உறுதியாக உள்ளனர். பத்திரிகைகள், டிவி, இணைய தளம், சமூக வலைதளம், பேஸ்புக்,யூடியூப் வாயிலாக, தேசிய அளவிலான அரசியல் நிலவரங்களை, இன்றைய இளைஞர்கள் தெளிவாக புரிந்துள்ளனர்.
விழிப்புணர்வுடன் உள்ள இளைஞர்களிடம்,அலங்கார வாய் ஜாலம் காட்டி, எந்த கட்சியும் ஓட்டு பெற முடியாத சூழல் நிலவுகிறது.
அரசியல்வாதிகளின் பின்புலம், அரசியல் வாழ்க்கை, அவரது குற்ற பின்னணி,செல்வாக்கு, மக்களிடம் பெற்றுள்ள வரவேற்பு என பலதரப்பட்ட விஷயங்களையும்,இளைஞர்கள் விவாதிக்கின்றனர். ஒருவருக்கு ஒருவர், கருத்து பரிமாற்றம் செய்து கொள்கின்றனர்.எனவே, வரும் லோக்சபா தேர்தலில் 2.2 லட்சம் இளைஞர்களின் ஓட்டுகள் யாருக்கு கிடைக்கும் என்பதை கணிக்க முடியாத சூழல் உள்ளது.
இவர்களில், புதிய வாக்காளர்களின் ஓட்டுகள் பல்வேறு கட்சிகளுக்கும் சிதற வாய்ப்புள்ளதால், ஓட்டு கணக்கு போட முடியாமல், அரசியல் கட்சியினர் திணறுகின்றனர்.
இளைஞர்களின் கையில் கொடுக்கப்பட்டுள்ள, புரட்சி ஆயுதமாக ஓட்டு மாறியுள்ளது.
பிறர் சொல்வதை கேட்டு, யாருக்கு ஓட்டளிப்பது என்று முடிவு செய்வதை விட, நாட்டிற்கு நல்லது செய்பவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதால்,இளைஞர்கள் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் எந்த கட்சி வேட்பாளருக்கு விரல் பதிக்கப்போகிறவர்கள்,யார் பக்கம் ஒட்டுமொத்தமாக சாய போகிறார்கள் என எதிர்பார்ப்பு பலமடங்காக எகிறியுள்ளது.

