/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நீரோடை ஆக்கிரமிப்பு: கிராம மக்கள் எதிர்ப்பு
/
நீரோடை ஆக்கிரமிப்பு: கிராம மக்கள் எதிர்ப்பு
ADDED : நவ 08, 2024 05:27 AM

பாகூர்: கிருமாம்பாக்கம் அருகே நீரோடையை ஆக்கிரமித்து பாதை அமைக்கும் பணிக்கு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.
கிருமாம்பாக்கம் அடுத்துள்ள ஆலடிமேடு, வம்பாபேட் கிராமங்களுக்கு இடையே மேற்கு பகுதியில் நல்ல தண்ணி ஓடை உள்ளது.
பாகூர் ஏரியில் திறக்கப்படும் தண்ணீர் மற்றும் மழைக்காலங்களில் வெள்ள நீர் இந்த ஓடை வழியாக சென்று, மற்றொரு ஓடையில் கலந்து, பனித்திட்டு முத்துவாரம் வழியாக கடலில் கலக்கும்.
இந்த ஓடையில் உள்ள நல்ல தண்ணீரை பயன்படுத்தி, அப்பகுதி விவசாயிகள், பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தனி நபர் ஒருவர், அந்த ஓடையை ஆக்கிரமித்து, மீன் குட்டை அமைத்துள்ள நிலையில், தற்போது, ஓடையின் குறுக்காக சிமென்ட் குழாய், சிமென்ட் காரைகளை பயன்படுத்தி பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.
இதனைக் கண்டித்த அப்பகுதி மக்கள், நேற்று ஆக்கிரமிப்பு பணியில் ஈடுபட்டவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த கிருமாம்பாக்கம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அனுமதியின்றி எந்த பணிகளையும் மேற்கொள்ள கூடாது என கூறி எச்சரித்து பணியை தடுத்து நிறுத்தினர்.
இப்பிரச்சனை தொடர்பாக, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வம்பாபேட், ஆலடிமேடு, பனித்திட்டு கிராம மக்கள், பொதுப்பணித்துறையில் புகார் தெரிவித்துள்ளனர்.

