/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் மறுசீரமைக்கப்பட்ட மின் பகிர்மான திட்டம்... துவக்கம்!ரூ.106 கோடியில் மின்சார கட்டமைப்பை மேம்படுத்த முடிவு
/
புதுச்சேரியில் மறுசீரமைக்கப்பட்ட மின் பகிர்மான திட்டம்... துவக்கம்!ரூ.106 கோடியில் மின்சார கட்டமைப்பை மேம்படுத்த முடிவு
புதுச்சேரியில் மறுசீரமைக்கப்பட்ட மின் பகிர்மான திட்டம்... துவக்கம்!ரூ.106 கோடியில் மின்சார கட்டமைப்பை மேம்படுத்த முடிவு
புதுச்சேரியில் மறுசீரமைக்கப்பட்ட மின் பகிர்மான திட்டம்... துவக்கம்!ரூ.106 கோடியில் மின்சார கட்டமைப்பை மேம்படுத்த முடிவு
ADDED : டிச 15, 2025 06:03 AM

புதுச்சேரி:புதுச்சேரி மாநிலம் முழுவதும் மின் கட்டமைப்புகளை மறுசீரமைப்பு செய்யும் திட்டம் 106 கோடியில் துவக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி துணை மின் நிலையங்களில் இருந்து வீடுகளுக்கு மின்கம்பங்கள் வழியாக மின்சாரம் கொண்டு செல்லும்போது மின் இழப்பு ஏற்படுகிறது. இது பொருளாதார ரீதியான இழப்பினை மின்துறைக்கு கொடுத்து, அது பொதுமக்களின் தலையில் தான் மின் கட்டண சுமையாக இறங்குகிறது.
இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், மத்திய அரசின் மறுசீரமைக்கப்பட்ட மின்பகிர்மான திட்டத்தினை, புதுச்சேரி அரசு 106 கோடியில் துவக்கியுள்ளது.
புதுச்சேரியில் பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட மின்கம்பிகள், மின்மாற்றிகள் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட உள்ளது. இதற்காக முக்கிய வழித்தடங்களில் உள்ள மின் கம்பிகள் அனைத்தும் 'ஏரியல் பன்ச்சடு கேபிள்' எனும் வான்வழி காப்பிடப்பட்ட கொத்து கேபிளாக மாற்றப்பட உள்ளது.
என்ன நன்மை புதுச்சேரி முழுவதும் வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என 4.5 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. நகர பகுதியில் மட்டும் தரைக்கு அடியில் மின்கேபிள்கள் பதிக்கப்பட்டு, மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. மற்ற பகுதிகளில் மின்கம்பங்களை பொருத்தி மின்சார வயர்கள் மூலம் மின்விநியோகம் செய்யப்படுகிறது. இப்படி மின்கம்பங்கள் வழியாக, இயற்கைச் சீற்றங்களின் போது மின்வயர்கள் அறுந்து விழுவதால் மனிதர்கள், கால் நடைகள் உயிரிழக்கும் சம்ப வங்களும் பரவலாக நடக்கின்றன. அடிக்கடி மின்தடை பிரச்னைகளும் ஏற்படுகின்றன. ஏ.பி.சி., வான்வழிகொத்து கேபிளுக்கு மாறும்போது மரங்கள் விழுந்தாலும் எந்த பாதிப்பும் இருக்காது. எந்த மின்தடை பிரச்னையும் இருக்காது.
எவ்வளது மாறுது முதற்கட்டமாக மின் கடத்திகளின் சுமையை குறைக்கும் வகையில் புதிதாக 69 கி.மீ., தொலைவிற்கு எச்.டி., லைனும், 30 கி.மீ., தொலைவிற்கு எல்.டி., லைனும் ஏ.பி.சி., வான்வழி கொத்து மின் லைனாக மாற்றப்பட உள்ளது.
இது தவிர தற்போதுள்ள பழைய 18 கி.மீ., எச்.டி., லைன்கள், 126 கி.மீ., எல்.டி., லைன்களிலுள்ள பழைய மின்கடத்திகளும் ஏ.பி.சி.,வான்வழி கொத்து கேபிள்களாக மாற்றப்பட உள்ளது.
இதேபோல் 20 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள 207 கி.மீ., எச்.டி., எல்.டி. லைனில் உள்ள பழைய மின் கடத்திகள், அதே பாணியில் புதிய மின் கடத்திகளாக மாற்றப்பட உள்ளது.
மின் மாற்றிகள் மின் இழப்பு குறைப்பதற்காக பல்வேறு திறன் கொண்ட 74 திறன் வாய்ந்த மின்மாற்றிகள் அமைக்கப்பட உள்ளது. இதேபோல் தற்போதுள்ள 84 பழைய மின்மாற்றிகள் நட்சத்திர குறியீடுடைய ஆற்றல் திறன் வாய்ந்த மின்மாற்றிகளாகவும் மாற்றப்பட உள்ளது. நான்கு பிராந்தியங்களில் உள்ள 9 துணை மின் நிலையங்களில் கெப்பாசிடர் பாங்க் எனும் புதிய மின்தேக்கி வங்கிகளும் நிறுவப்பட உள்ளது. இதன் மூலம் அரை மெகாவாட் திறனை ஒவ்வொரு துணை மின் நிலையங்களும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடதக்கது.
மண்ணாடிப்பட்டு தொகுதியில்
பிள்ளையார் சுழி
மண்ணாடிப்பட்டு தொகுதி காட்டேரிக்குப்பத்தில் இத்திட்டத்தை அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் 4 கோடி ரூபாய் செலவில் தொகுதி முழுவதும் மின் கட்டமைப்பு மாற்றியமைக்கப்படுகிறது. புதிதாக 2 திறன் வாய்ந்த மின்மாற்றிகள் நிறுவவும், ஏற்கனவே உள்ள 4 மின்மாற்றிகள் நட்சத்திர குறியீடுடைய ஆற்றல் மின்மாற்றிகளாக மாற்றப்படுகிறது. 10 கி.மீ., தொலைவிற்கு எல்.டி., லைன்கள் வான்வழி கொத்து கேபிளாக மாற்றப்படுகிறது. அத்துடன் 4 கி.மீ., தொலைவிற்கு எச்.டி., லைன், 8 கி.மீ., தொலைவிற்கு மின் லைன்கள் புதிதாக மாற்றப்பட உள்ளது.

