/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரசவத்திற்கு அனுமதித்த கர்ப்பிணி சாவு உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு
/
பிரசவத்திற்கு அனுமதித்த கர்ப்பிணி சாவு உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு
பிரசவத்திற்கு அனுமதித்த கர்ப்பிணி சாவு உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு
பிரசவத்திற்கு அனுமதித்த கர்ப்பிணி சாவு உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு
ADDED : பிப் 09, 2024 05:45 AM

புதுச்சேரி: அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி குழந்தையுடன் இறந்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
தவளக்குப்பம் அடுத்த அபிேஷகப்பாக்கத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார், 30; மொபைல் போன் டவர் டெக்னீஷியன். இவரது மனைவி, தீபா,26; நிறைமாத கர்ப்பிணி. இவரை, கடந்த 2ம் தேதி, புதுச்சேரி ராஜிவ்காந்தி அரசு மகளிர் மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்தனர்.
நேற்று முன்தினம், இரவு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. பணியில் இருந்த டாக்டர்கள் அவரை, பரிசோதனை செய்தனர். திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டு, தாயும், வயிற்றில் இருந்த பெண் குழந்தையும் இறந்த விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அதிர்ச்சியடைந்த பெண்ணின் உறவினர்கள், நேற்று காலை 7:00 மணியளவில் மருத்துவமனை எதிரே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதையடுத்து, மருத்துவமனை உள்ளிருப்பு அதிகாரி மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி ஆகியோர் மறியலில் ஈடுப்பட்டவர்களை அழைத்து, மருத்துவமனையில் தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்ததை ஏற்று 9:00 மணியளவில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், இப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து, ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
உறவினர்கள் குற்றச்சாட்டு
பெண்ணின் உறவினர் கூறுகையில், 'தீபாவை, கடந்த 2ம் தேதி மருத்துவமனையில் சேர்த்தோம். தொடர்ந்து டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 12:30 மணிக்கு, வயிற்றில் நீர் அதிகமாக உள்ளது; உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும் என, அவரை வார்டில் இருந்து ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்து சென்றனர். பின், குழந்தை திரும்பி விட்டது. ஆபரேஷன் தேவையில்லை, என டாக்டர்கள் கூறினர். இரவு 1:30 மணிக்கு, வலிப்பு ஏற்பட்டு, தாயும், குழந்தையும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இரவில் அவசரத்திற்கு சீனியர் டாக்டர்கள் இல்லாமல், பயிற்சி டாக்டர்கள் மூலம் பிரசவம் பார்த்ததால், அவர், இறந்தார்' என்றனர்.

