ADDED : நவ 18, 2024 07:16 AM

புதுச்சேரி; புதுச்சேரியில் அரவிந்தர் ஆசிரமத்தில், அன்னை வாழ்ந்த அறையை பொதுமக்கள், பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அன்னை என்று அழைக்கப்படும் மிர்ரா அல்பாஸா, கடந்த, 1878ல் பிரான்ஸ் நாட்டில் பிறந்தார். அரவிந்தரின் யோக முறைகள் கவர்ந்ததால் அவர் இந்தியா வந்தார். அரவிந்தர் வாழ்ந்த புதுச்சேரியிலேயே தங்கி அவரது ஆன்மிக, யோக பணிகளுக்கு உறுதுணையாக இருந்தார்.
அரவிந்தர் ஆசிரமம் மற்றும் ஆரோவில் என்ற சர்வதேச நகரை உருவாக்கினார். மேலும் அரவிந்தர் ஆசிரமத்தில் வாழ்ந்த அன்னை கடந்த 1973ம் ஆண்டு நவ., 17ம் தேதி மகா சமாதி அடைந்தார்.
இந்நிலையில், நேற்று அன்னையின், 51ம் ஆண்டு மகா சமாதி தினத்தையொட்டி, புதுச்சேரி மரைன் வீதியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில், ஆசிரம வாசிகளின் கூட்டு தியான நிகழ்ச்சி காலையில் நடந்தது. தொடர்ந்து காலை 6:00 மணி முதல் 12:00 மணி வரை, அன்னை வாழ்ந்த அறையை பக்தர்கள், பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து அன்னை அறையை தரிசித்தனர்.
