/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வயதை குறைத்து பணியில் தொடர்ந்த உடற்கல்வி ஆசிரியருக்கு 4 ஆண்டு சிறை
/
வயதை குறைத்து பணியில் தொடர்ந்த உடற்கல்வி ஆசிரியருக்கு 4 ஆண்டு சிறை
வயதை குறைத்து பணியில் தொடர்ந்த உடற்கல்வி ஆசிரியருக்கு 4 ஆண்டு சிறை
வயதை குறைத்து பணியில் தொடர்ந்த உடற்கல்வி ஆசிரியருக்கு 4 ஆண்டு சிறை
ADDED : ஜூலை 01, 2025 01:41 AM
புதுச்சேரி : அரசு பள்ளியில் வயதை மாற்றி கொடுத்து கூடுதலாக 5 ஆண்டுகள் பணியாற்றிய உடற்கல்வி ஆசிரியருக்கு, தலைமை குற்றவியல் நீதிபதி 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.
புதுச்சேரி வ.உ.சி., அரசு மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் அருணாச்சலம், கடந்த 2022ம் ஆண்டு மே 17 ம் தேதி சி.பி.சி.ஐ.டி., போலீஸ் ஸ்டேஷனில் உடற்கல்வி ஆசிரியர் மீது புகார் அளித்தார். அதில், அப்பள்ளியில் பணியாற்றிய உடற்கல்வி ஆசிரியர் நாராயணசாமி, அரசின் பதிவேட்டின்படி, 1953ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி என்ற தனது பிறந்த தேதியை, திண்டிவனம் கோர்ட்டில் தவறான தகவல்கள் அளித்து, 1958 ம் ஆண்டு ஏப்ரல் 8 ம் தேதி பிறந்தவர் போல் பிறந்த பதிவினை போலியாக மாற்றி கல்வித்துறையிடம் சமர்பித்துள்ளார்.
இதன் மூலம் 2013ம் ஆண்டிலே பணி ஓய்வு பெற வேண்டியவர், 2018 ம் ஆண்டு வரை தனது பணி ஓய்வு காலத்தையும் தாண்டி அரசு பணியினை தொடர்ந்துள்ளார். அதனால், அரசிற்கு 41 லட்சத்து 85 ஆயிரத்து 311 ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தி சுயலாபம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தியதில், நாராயணசாமி தனது பிறந்த தேதியை சட்டவிரோதமாக திருத்தம் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது பொது ஊழியருக்கு தவறான தகவல் அளித்தல், பொய் சாட்சியம் அளித்தல், ஏமாற்றும் நோக்கில் பொய்யான ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, விசாரணை புதுச்சேரி தலைமை குற்றவியல் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.
அரசு தரப்பில், உதவி குற்றவியல் வழக்கறிஞர் லோகேஸ்வரன் ஆஜராகி வாதாடினார். இந்நிலையில், வழக்கு விசாரணை முடிவடைந்து, தலைமை குற்றவியல் நீதிபதி சிவக்குமார் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், நாராயணசாமி மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ. 21 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், அபராத தொகையை கட்ட தவறும் பட்சத்தில் மேலும் 3 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், பிரான்சிஸ் டொமினிக், சுரேஷ்பாபு ஆகியோர் விசாரணை அதிகாரிகளாக செயல்பட்டனர்.