/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விதைகளாக விழும் காகிதப் பேனாக்கள்… வலிகளில் இருந்து வளமாகும் வாழ்க்கை
/
விதைகளாக விழும் காகிதப் பேனாக்கள்… வலிகளில் இருந்து வளமாகும் வாழ்க்கை
விதைகளாக விழும் காகிதப் பேனாக்கள்… வலிகளில் இருந்து வளமாகும் வாழ்க்கை
விதைகளாக விழும் காகிதப் பேனாக்கள்… வலிகளில் இருந்து வளமாகும் வாழ்க்கை
ADDED : ஜன 04, 2026 04:48 AM

புதுச்சேரி ஜவகர் நகர் 5-வது குறுக்கு தெருவில், பட்ஸ் ஆப் ஹெவன் எனும் அமைதியான காப்பகத்துக்குள் நுழைந்தால், அமைதியான ஒரு அறை… சுவர்களில் பழைய காலண்டர்களின் நிறங்கள். மேசைகளின் மீது சுருட்டப்பட்ட காகிதங்கள். அந்த காகிதங்களை மெதுவாக உருட்டும் கைகள். சில கைகளில் வயதின் சுருக்கங்கள்,
சில கைகளில் இளமையின் நடுக்கம். யாரும் கூச்சலிடவில்லை. யாரும் அவசரப்படவில்லை. காகிதம் சுருட்டும் சத்தம் மட்டுமே அந்த அறையின் மவுனத்தை உடைத்து கொண்டு கேட்கிறது. சில நிமிடங்களில் உருட்டப்பட்ட காகிதங்கள் அழகிய பேனாக்களாக தயராகி விடுகின்றது. அங்கு சாதாரணமாக காட்சியளிக்கும் காகித பேனாக்கள் தான் அங்கு இருக்கும் மன வளர்ச்சி குன்றிய பெண்களின் நம்பிக்கையின் விதைகள். வலியால் சிதைந்த மனங்களை மீண்டும் வாழ்வின் பாதையில் நடக்க வைக்கும் மவுனமான நம்பிக்கையை இந்த பேனாக்கள் ஏற்படுத்தி வருகின்றன.. அங்கு தயாராகும் காகிதப் பேனாக்கள், எழுதித் தீர்ந்த பிறகு குப்பையாக மாறுவதில்லை.
மண்ணில் விழுந்தவுடன், அவை விதைகளாக மாறுகின்றன. தக்காளி, கத்திரிக்காய், பாகற்காய், பூசணி, வெண்டை, புடலங்காய், பரங்கிக்காய் என கொடிவகை காய்கறிகளின் விதைகள், அந்தப் பேனாவின் முனையில் உறங்கிக்கிடக்கின்றன. எழுதி முடிந்ததும், மண்ணில் புதைக்கப்பட்டால்…அவை முளைத்து, கொடிகளாய் பரவி, காய்கறிகளாய் பலன் தருகின்றன.
இந்தப் பேனாவில், ரிபில் மட்டும் பிளாஸ்டிக். மற்ற அனைத்தும் காகிதம் மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதம். அதுவும் சாதாரண காகிதம் அல்ல. புதுச்சேரி அரசின் பழைய காலண்டர்கள், புதுச்சேரி பல்கலைக்கழக காலண்டர்கள், ஜூவல்லரி கடைகளின் காலண்டர்கள் இவையே இவர்களின் மூலப்பொருள். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்தாலே, அரசுத் துறைகள், பல்கலைக்கழகங்கள் என நேரில் சென்றுபழைய காலெண்டர்களை சேகரிக்கின்றனர். அவை காப்பகத்திற்கு கொண்டு வரப்பட்டு, சுருளாக சுருட்டப்பட்டு, மனநிலை குன்றிய பெண்களின் கைகளில் உயிர் பெறுகின்றன. ஒரு மணி நேரத்தில் 10 பேனாக்கள். மூடியுடன் கூடிய பேனா என்றால் 5. ஒரு பேனாவின் விலை வெறும் 8 ரூபாய். ஆனால் அதன் மதிப்பு… அளவிட முடியாதது.
பிறந்தநாள் விழாக்கள், சிறப்பு நிகழ்ச்சிகள்…முன்கூட்டியே மொத்தமாக ஆர்டர் செய்து இந்த பேனாக்களை வாங்கிச் செல்கிறார்கள். அதன் மூலம், இந்த பெண்களுக்கு தன்னம்பிக்கை கிடைக்கிறது, சுற்றுச்சூழலுக்கு ஒரு சிறிய பங்களிப்பு செய்யும் மன நிறைவும் கிடைக்கிறது.
இந்த புதுமையான முயற்சியின் பின்னால் நிற்பவர் காப்பக சகோதரி சகாயமேரி. “பேனாக்கள் என்றாலே பிளாஸ்டிக் தான். அவை மண்ணில் விழுந்தாலும் நூற்றாண்டுகள் ஆனாலும் மட்காது. அதற்கு மாற்றாகவே இந்த சுற்றுச்சூழல் நட்பு காகிதப் பேனாவை உருவாக்கினோம்.என்கிறார் அவர் நிதானமாக.
அது சரி “இந்த பெண்கள் எப்படி காப்பகத்துக்கு வந்தார்கள் என்ற கேள்வி எழும்போது, சகோதரி சகாயமேரியின் குரல் சற்றே கனமாகிறது. “அது துயரமான கதை… பெண்கள் என்றாலே வாழ்க்கை போராட்டம். மனநிலை குன்றிய பெண்கள் என்றால் அந்தப் போராட்டம் சொல்லவே தேவையில்லை. சிலர் கோபத்தில் வீட்டைவிட்டு வெளியேறியவர்கள். சிலர் சாலைகளில் திரிந்தபோது காவல்துறையால் மீட்கப்பட்டவர்கள். ஒருசிலரை… அவர்களது உறவுகளே சுமையாகக் கருதிசாலைகளில் விட்டுச் சென்றவர்கள்.” ஒவ்வொரு பெண்ணின் பின்னாலும் இப்படி ஆயிரம் வலிகள்… ஆயிரம் ரணங்கள். அந்த வலிகளை வார்த்தைகளால் ஆற்ற முடியாது. ஆனால்… இந்த காகிதப் பேனாக்கள் அவர்களை மறக்கச் செய்கின்றன. இயங்கச் செய்கின்றன. வாழ்க்கையை மீண்டும் பிடித்துக்கொள்ளச் செய்கின்றன என்றார் அழுத்தமாக...

