தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில் என்.எஸ்.எஸ்.,மாணவர்கள் துாய்மை பணி

 லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில் என்.எஸ்.எஸ்.,மாணவர்கள் துாய்மை பணி

 லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில் என்.எஸ்.எஸ்.,மாணவர்கள் துாய்மை பணி


ADDED : ஜன 28, 2026 05:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2026 05:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில் குவிந்து கிடந்த பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் மதுபாட்டில்களை, லட்சுமிநாராயணா செவிலியர் கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவ மாணவியர், நகராட்சி ஊழியர்களுடன் இணைந்து அகற்றி சுத்தம் செய்தனர்.

லாஸ்பேட்டையில் விமான நிலையம், நீதிபதிகள் குடியிருப்பு மற்றும் அரசு கல்வி நிறுவனங்களுக்கு இடையே ஹெலிபேட் மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் நுாற்றுக்கணக்கானோர் நடைப்பயிற்சி செல்கின்றனர். யோகா மற்றும் விளையாட்டு பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹெலிபேட் மைதான வளாகத்தில், ஸ்கேட்டிங் பயிற்சி மைதானம் தனியாக உள்ளது. அரசு சார்பில் கட்டி கொடுக்கப்பட்ட இந்த ஸ்கேட்டிங் மைதானத்தை தனியார் ஸ்கேட்டிங் சங்கங்கள் நிர்வகித்து வருகிறது. இங்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க கட்டணம் வசூலித்து வருகின்றனர்.

பொறுப்பை மறந்த பெற்றோர்கள் ஸ்கேட்டிங் பயிற்சிக்கு மாணவர்களை அழைத்து வரும் பெற்றோர்கள், அருகில் உள்ள ஹெலிபேட் மைதானத்தில் உள்ள பெஞ்சுகளில் அமர்ந்து ஓய்வெடுக்கின்றனர். பயிற்சி முடித்து வரும் தங்கள் பிள்ளைகளுக்கு பீசா, பர்கர், நுாடுல்ஸ், பிரைடு ரைஸ் போன்ற துரித உணவுகள், சமோசா, பப்ஸ், சிப்ஸ் போன்ற தின்பண்டங்களை பார்சலில் வாங்கி வந்து சாப்பிட கொடுக்கின்றனர்.

உணவுகள் பேக் செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் கப் மற்றும் தண்ணீர் பாட்டில்களை மைதானத்தில் உள்ள குப்பை தொட்டிகளில் போடாமல், சமூக பொறுப்பில்லாமல் திறந்த வெளியில் வீசி விட்டு செல்கின்றனர். இதனால், மைதானம் முழுவதும் குப்பையும், கூளமுமாக அலங்கோலமாக காட்சியளிக்கிறது.

சங்கங்களுக்கு பொறுப்பு தேவை அரசு கட்டிக் கொடுத்த மைதானத்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து, வருமானம் ஈட்டி வரும் தனியார் சங்கங்களும், மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் வீசி விட்டு செல்லும் குப்பைகளை தினசரி அகற்றுவதில்லை. 'வந்தோமா பயிற்சி கொடுத்தோமோ, கட்டணம் வசூலித்தோமா' என சென்று விடுகின்றனர்.

போதாக்குறைக்கு, இரவு நேரங்களில் ஹெலிபேட் மைதானத்தில் கூடி மது அருந்தும் சமூக விரோதிகள், தாங்கள் கொண்டு வரும் இறைச்சி உள்ளிட்ட சைடிஷ்களை சாப்பிட்டுவிட்டு மீதமான எலும்பு, சால்னா போன்ற உணவு பொருட்களையும், காலி மதுபாட்டில்களையும் மைதானத்தில் வீசிவிட்டு செல்கின்றனர்.

பல நேரங்களில், போதை தலைக்கேறியதும் மதுபாட்டில்களை உடைத்து விட்டும் செல்கின்றனர். இதனால், மைதானம் சுகாதார சீர்கேடு அடைந்து துர்நாற்றம் வீசியது. இதனால், நடைபயிற்சி மேற்கொள்வோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

சபாஷ் மாணவ, மாணவியர் இதனை அறிந்த லட்சுமிநாராயணா செவிலியர் கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவ மாணவியர், உழவர்கரை நகராட்சி ஊழியர்களுடன் இணைந்து லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில் நேற்று துாய்மை பணியை மேற்கொண்டனர். இப்பணியை, நகராட்சி சுகாதார அதிகாரி ராஜா துவக்கி வைத்தார். இளநிலை பொறியாளர்கள் ஜெய்சங்கர், சேகர், கல்லுாரி என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் பாலாஜி உடனிருந்தனர்.

'துாய்மையே சேவை' என்ற நோக்கில், மைதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிதறிக் கிடந்த குப்பைகளை சேகரித்தனர். இவர்களுக்கு உதவியாக, நகராட்சி துப்புரவு ஊழியர்களும் இணைந்து, சேகரிக்கப்பட்ட குப்பைகளை வாகனங்களில் ஏற்றி அப்புறப்படுத்தினர். மாணவர்களின் முயற்சியால் மைதானம் தற்போது 'பளீச்'சென மாறியுள்ளது.

விழிப்புணர்வு அவசியம்


துப்புரவு பணியை மேற்கொண்ட மாணவர்கள் கூறுகையில், 'இன்று நாங்கள் சுத்தம் செய்த இந்த இடம் மீண்டும் அசுத்தமாகாமல் இருக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். குப்பைகளை, குப்பை தொட்டியில் போடுவது நம் ஒவ்வொருவரின் கடமை. நாம் போடும் குப்பை நம்மை சார்ந்தவர்களுக்கே நோய்த்தொற்றை உண்டாக்கும் என்பதை உணர வேண்டும்,' என்றனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us