/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் புதிதாக கட்டிய 2 அடுக்கு வீடு: வாய்க்காலில் பள்ளம் தோண்டியபோது விழுந்தது
/
புதுச்சேரியில் புதிதாக கட்டிய 2 அடுக்கு வீடு: வாய்க்காலில் பள்ளம் தோண்டியபோது விழுந்தது
புதுச்சேரியில் புதிதாக கட்டிய 2 அடுக்கு வீடு: வாய்க்காலில் பள்ளம் தோண்டியபோது விழுந்தது
புதுச்சேரியில் புதிதாக கட்டிய 2 அடுக்கு வீடு: வாய்க்காலில் பள்ளம் தோண்டியபோது விழுந்தது
ADDED : ஜன 23, 2024 12:39 AM

புதுச்சேரி : புதுச்சேரியில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், மறைமலையடிகள் சாலை சந்திப்பு முதல் உப்பளம் வரை உப்பனாறு வாய்க்கால் கரையை பலப்படுத்தும் பணி நடைபெறுகிறது.
இதற்காக நேற்று ஆட்டுப்பட்டி அருகே பள்ளம் தோண்டியபோது கரையோர வீடுகளில் அதிர்வு ஏற்பட்டது. அதனால், கனரக இயந்திரம் மூலம் பள்ளம் தோண்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த அ.தி.மு.க., மாநில செயலர் அன்பழகன், பள்ளம் தோண்டும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஒதியஞ்சாலை போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர்.
இந்நிலையில், மதியம் 1:30 மணிக்கு திடீரென வாய்க்கால் ஓரம் சேகர்-சித்ரா தம்பதி, 400 சதுர அடியில் புதிதாக கட்டியுள்ள தரைத்தளத்துடன் கூடிய இரண்டடுக்கு மாடி வீடு திடீரென சாய்ந்து, மளமளவென சரிந்து வாய்க்காலுக்குள் விழுந்தது.
வீட்டின் அருகில் நின்றிருந்த அன்பழகன், போலீசார், பொதுமக்கள் அங்கிருந்து தலைதெறிக்க ஓடியதாலும், வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த வீட்டில் அடுத்த மாதம் கிரகப்பிரவேசம் செய்ய இறுதிகட்ட பணிகள் நடந்து வந்தன. வாய்க்காலில் அதிகப்படியான மண் எடுத்ததால் வீடு இடிந்து விழுந்ததாக குற்றம்சாட்டி, அ.தி.மு.க., மாநில செயலர் அன்பழகன் மதியம் 2:00 மணிக்கு அப்பகுதி மக்களுடன் மறைமலையடிகள் சாலையில் மறியலில் ஈடுபட்டார்.
பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், பேச்சு நடத்தினார். வீடு கட்டுமான பணிக்கு போதிய ஆவணங்கள் பெறப்பட்டதா, நிர்ணயித்த அளவை விட வாய்க்காலில் அதிக மண் அள்ளப்பட்டுள்ளதா என விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். அதை ஏற்க மறுத்த பொதுமக்கள், மறியலை தொடர்ந்தனர்.
அவர்களிடம், அ.தி.மு.க., மாநில செயலர் அன்பழகன், முதல்வருடன் பேசி உரிய நிவாரணம் பெற்று தருவதாக கூறியதை ஏற்று, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
புதிதாக கட்டப்பட்ட வீடு, வாய்க்கால் பணிக்கு பள்ளம் தோண்டியபோது சரிந்த விழுந்த சம்பவம் புதுச்சேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

