/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புத்தாண்டு கொண்டாட்டம்: நாளை போக்குவரத்து மாற்றம்
/
புத்தாண்டு கொண்டாட்டம்: நாளை போக்குவரத்து மாற்றம்
புத்தாண்டு கொண்டாட்டம்: நாளை போக்குவரத்து மாற்றம்
புத்தாண்டு கொண்டாட்டம்: நாளை போக்குவரத்து மாற்றம்
ADDED : டிச 30, 2025 04:23 AM
புதுச்சேரி: புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, புதுச்சேரியில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து போக்குவரத்து சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரியில் நடைபெறவுள்ள புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி நாளை 31ம் தேதி இரவு கடற்கரை சாலை மற்றும் நகரின் மையப் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடுவர். அதனால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நாளை 31ம் தேதி மதியம் 2 மணி முதல் ஜனவரி 1ம் தேதி காலை 9 மணிவரை, ஒயிட் டவுன் உள்ளே வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. மேலும், ஆம்பூர் சாலையில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும் அனைத்து சாலைகளும் தற்காலிகமாக மூடப்படும்.
அரசு மருத்துவமனைக்கு செல்லும் வாகனங்கள் செயின்ட் ஆஞ்ச் வீதி - செஞ்சி சாலை, சூர்கூப் வீதி செஞ்சி சாலை வழியாக செல்ல வேண்டும்.
கடற்கரை சாலையை ஒட்டிய ஓயிட் டவுனில் அமைந்துள்ள சர்ச், தங்கும் விடுதிகள், உணவகங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்கள் மற்றும் அப்பகுதியில் வசிப்போரின் வசதிக்காக நான்கு வகையான நுழைவு அட்டைகள் போக்குவரத்து எஸ்.பி,. அலுவலகத்தில் வழங்கப்படும். தேவையுள்ளவர்கள் ஆதார், இருப்பிட சான்று மற்றும் உணவகங்கள் தங்கும் விடுதிக்கான வர்த்தக உரிம நகலை சமர்பித்து நுழைவு அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம்.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கடற்கரை நோக்கு வருபவர்கள் வாகனங்கள் நிறுத்த 10 தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதில், உப்பளம் பெத்தி செமினார் பள்ளி பகுதியில் இருசக்கர வாகனங்கள் மட்டும் நிறுத்த வேண்டும். அம்பூர் சாலை மற்றும் மிஷன் வீதிகள் இடையே உள்ள அனைத்து சாலைகளின் தெற்கு பகுதியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தலாம்.
உப்பளம் புதிய துறைமுகம், இந்திரா காந்தி விளையாட்டரங்கம், உப்பளம் பெத்தி செமினார் பள்ளி, பாண்டி மெரினா, ஒதியஞ்சாலை பழைய பஸ் நிலைய வளாகம், நேருவீதி பழைய சிறை வளாகம், செஞ்சி சாலை, புஸ்சி வீதி சந்திப்பில் உள்ள பழைய சட்டக் கல்லூரி, முத்தியால்பேட்டை பாரதிதாசன் மகளிர் கல்லூரி, வாசவி இன்டர்நேஷனல் பள்ளி, கருவடிக்குப்பம் பாத்திமா பள்ளி ஆகிய இடங்களில் வாகனங்கள் நிறுத்தலாம்.
இந்த தற்காலிக வாகன நிறுத்துமிடங்களில் இருந்து மக்களின் வசதிக்காக 30 பி.ஆர்.டி.சி., பஸ்கள் கடற்கரைக்கு இலவசமாக இயக்கப்படுகிறது.
வாகனங்களுக்கு தடை
நாளை 31ம் தேதி மதியம் 2 மணி முதல் மறுநாள் 1ம் தேதி காலை 6 மணி வரை நகரப் பகுதியில் கனரக வாகனங்கள் இயக்கவும், நிறுத்தவும் தடை செய்யப்பட்டுள்ளது.
பஸ் ஸ்டாண்டில் புறப்படும் பஸ்கள் சி.வி. சாலை சந்திப்பு - நெல்லித்தோப்பு சந்திப்பு, - இந்திரா சதுக்கம், - ராஜிவ் சதுக்கம் வழியாக இ.சி.ஆர். வழியாக செல்ல வேண்டும்.
இ.சி.ஆரில் இருந்து புதுச்சேரி வரும் பஸ்கள், கோட்டக்குப்பம் ரவுண்டானாவில் வலதுபுறம் திரும்பி,- சிவாஜி சதுக்கம், ராஜிவ் சதுக்கம், இந்திரா சதுக்கம், நெல்லித்தோப்பு சந்திப்பு வழியாக ஸ் நிலையம் செல்ல வேண்டும்.
பாண்டி மெரினாவுக்கு செல்ல விரும்புவோர் இந்திரா காந்தி விளையாட்டரங்கத்தின் உள் சாலைகளைப் பயன்படுத்தி, பாண்டி மெரீனாவை நோக்கி வம்பாகீரப்பாளையம் வழியாக செல்ல வேண்டும். .
பாண்டி மெரினாவில் இருந்து திரும்பும்போது, உள்ளே சென்ற இருசக்கர வாகனங்கள் கேட் எண் 3 வழியாகவும், நான்கு சக்கர வாகனங்கள் கேட் எண் 4 வழியாகவும் திருப்பி விடப்படும். இந்த வாகனங்கள் அனைத்தும் சோனாம்பாளையம் சந்திப்பில் நெரிசலைத் தவிர்க்க முதலியார்பேட்டை நோக்கி அம்பேத்கர் சாலையில் இடப்புறம் திரும்பி செல்ல வேண்டும்.
வழிகாட்டி பலகை:
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் எளிதில் வழி காணும் வகையில் 400 போக்குவரத்து வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தீவிர ரோந்து
வேகமாக ஓட்டுதல், மது போதையில் வாகனம் ஓட்டுதல், அதிக நபர்களை ஏற்றி செல்லுதல் போன்ற விதிமீறல்களை தடுக்க போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய சந்திப்புகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. விதிமீறல்கள் பதிவு செய்து, மோட்டார் வாகன சட்டத்தின் படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடக்க அனைவரும் போலீசாருடன் ஒத்துழைக்கவும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

