/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழிற்சாலைகள் அனுமதி விவகாரத்தில்... புதிய தளர்வு; சுற்றுச்சூழல் துறை அரசாணை வெளியீடு
/
தொழிற்சாலைகள் அனுமதி விவகாரத்தில்... புதிய தளர்வு; சுற்றுச்சூழல் துறை அரசாணை வெளியீடு
தொழிற்சாலைகள் அனுமதி விவகாரத்தில்... புதிய தளர்வு; சுற்றுச்சூழல் துறை அரசாணை வெளியீடு
தொழிற்சாலைகள் அனுமதி விவகாரத்தில்... புதிய தளர்வு; சுற்றுச்சூழல் துறை அரசாணை வெளியீடு
UPDATED : ஜூலை 21, 2025 12:00 PM
ADDED : ஜூலை 21, 2025 06:39 AM

புதுச்சேரி: தொழிற்சாலைகள் அனுமதி விவகாரத்தில் சுற்றுச்சூழல் துறைதளர்வு அளித்து நடைமுறையை எளிமைப்படுத்தியுள்ளது.
புதுச்சேரியின் பொருளாதாரத்திற்கு தொழிற்சாலைகள் முக்கியமானது. தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் கழிவுகளால், விவசாய நிலங்கள் மட்டுமின்றி, தண்ணீர், காற்று என, அனைத்தும் பாதிக்கிறது.
கழிவுகளை உரிய முறையில் சுத்திகரித்து வெளியேற்றாவிட்டால், சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் கடும் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முடியாது. விவசாயிகள் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.
எனவே, நிலத்தடி நீரை உறிஞ்சாத, சுற்றுச்சூழலை பாதிக்காத தொழிற்சாலைகளுக்கு மட்டுமே புதுச்சேரி அரசு அனுமதி அளித்து வருகிறது. புதிய தொழிற்சாலைகளை கொண்டுவந்து வேலைவாய்ப்பினை ஏற்படுத்த திட்டமிட்டுள்ள புதுச்சேரி அரசு தற்போது புதிய முடிவிற்கு வந்துள்ளது.
மாசு குறியீட்டில் வெள்ளை வகைப்பாட்டின் கீழ், வகைப்படுத்தப்பட்டுள்ள தொழிற்சாலைகள் இனி மாசு கட்டுப் பாடு வாரியத்திடமிருந்து தொழிற்சாலையை நிறுவு வதற்கான மற்றும் தொடர்ந்து இயக்குவதற்கான இசைவாணையை பெற வேண்டிய அவசியமில்லை.
சுற்றுச்சூழல் அனுமதி பெறும் எந்தத் தொழிற்சாலைக்கும் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் நிறுவுவதற்கான இசைவாணை பெற வேண்டிய அவசியமில்லை என, அறிவித்துள்ளது. இது தொடர்பாக சுற்றுச்சூழல் துறை வாயிலாக தற்போது அரசாணை பிறப்பித்துள்ளது.
இனி, வெள்ளை மாசு குறியீட்டு கீழ் உள்ள தொழிற்சாலைகள் விண்ணப்பித்து அனுமதி பெறுவதற்கு பதிலாக, இயற்கையை பாதிக்காத வகையில், இந்த புதிய தொழிற்சாலையை ஆரம்பிக்கிறோம் என, எழுத்து பூர்வமாக சுய உறுதிமொழி படிவத்தில் கையொப்பமிட்டு சமர்ப்பித்தால் போதுமானது.
காற்று மாசுபாடு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் 1981 மற்றும் நீர் மாசுபாடு மற்றும் கட்டுப்பாடு சட்டம் 1974 ஆகிய சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொண்ட மத்திய அரசு, புதிய தளர்வினை தொழிற்சாலைகளுக்கு அளித்தது. அதன் அடிப்படையில் புதுச்சேரி சுற்றுச்சூழல் துறையும் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
மாநிலத்தில் 9 ஆயிரத்திற்கும் மேம்பட்ட சிறு, குறு, நடுத்தர, பெரிய தொழிற்சாலைகள் உள்ள நிலையில், சுற்றுச்சூழல் துறை, மாசுகட்டுப்பாட்டு துறையின் அனுமதியை 1,324 தொழிற்சாலைகள் மட்டுமே பெற்றுள்ளன. இவை மாசு குறியீட்டின்படி சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, வெள்ளை, நீலம் என, ஐந்து வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.
புதிய தளர்வு மூலம் வெள்ளை வகைபாட்டின் கீழ் உள்ள தொழிற்சாலைகள் சுய உறுதிமொழி படிவம் கொடுத்து பட்டியலில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

