/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுவாச மண்டலத்தை உறுதிப்படுத்தும் முறைகள்
/
சுவாச மண்டலத்தை உறுதிப்படுத்தும் முறைகள்
ADDED : ஜூலை 24, 2025 03:33 AM

ஹதேனாக்களின் முதல் பகுதி கீழ் மார்பு சுவாசத்துடன் இணைந்தது. உஷ்ட்ராசனம் மற்றும் ஷஷாசனம். இது முதுகெலும்பிற்கு ஏதுவான நிலைகளாகும். இவை உதரவிதானம் மற்றும் வயிற்று பகுதி யின் பலத்தை கூட்டும்.
இரண்டாவது பகுதி நடு மார்பு சுவாசத்துடன் இணைந்தது; மத்ஸயசனம். இந்நிலையில் இருதயம் பலப்படுகிறது.
மூன்றாவது பகுதி மேல்மார்பு சுவாசத்துடன் இணைந்தது நிகுஞ்சாசனம். இது இடுப்பு பகுதியில் ஏற்படும் மாற்றங்களை சீரமைக்கிறது.
வியாக்ரஹ பிராணாயாமத்தால் முழு மார்பும் வலுவடைகிறது. மேலும், முதுகெலும்பு, கைகள், மணிக்கட்டு மற்றும் கால் முட்டிகளும் வலுவடைகின்றன.
ஹதேனாக்கள் பயிற்சியின்போது, ஆசன நிலைக்கு செல்லும் பொழுதும், நிலையில் இருக்கும் பொழுதும் நன்கு நீண்டு ஆழ்ந்து சுவாசிப்பது அவசியம். நுரையீரலின் எந்தப்பகுதியில், எந்த பாகத்தில், காற்றை செலுத்த வேண்டும். மேலும், அந்த பாகம் நீண்டு விரிவடைகிறது என்பதை உணர்வது அவசியம்.
இனி செயல்முறையை பார்ப்போம்:
வஜ்ராசனம் குதிகால்களின் மேல் அமர வேண்டும். உள்ளங்கைகள் தொடையை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். இடுப்பு, தோள்கள் மற்றும் தலை ஒரே நேரக்கோட்டில் இருப்பது போல் நேராக நிமிர்ந்து அமர வேண்டும்.
சபூர்ண உஷ்ட்ராசனம் -நிலை 1 வஜ்ராசன நிலையில் சுவாசத்தை உள்ளிழுத்தபடி, முட்டி போட்டுக் கொண்டு பின்பக்கமாக வளைந்து, கைகளை பக்கவாட்டில் தளர்வாக விட வேண்டும். கண்கள் திறந்திருக்க வேண்டும். சுவாசத்தை வெளியேற்றியபடி, வஜ்ராசனத்தில் அமரவும். இருமுறை மேலும் செய்ய வேண்டும்.
சபூர்ண உஷ்ட்ராசனம் -நிலை 2 வஜ்ராசனத்தில், பின்புறமாக உள்ளங்கைகளை தரையில் படும்படி அழுத்தி வைக்க வேண்டும். கைவிரல்கள், கால் விரல்களை தொட வேண்டும். சுவாசத்தை உள்ளிழுத்தபடி இடுப்பை எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயர்த்த வேண்டும். சுவாசத்தை வெளியேற்றியபடி திரும்ப இடுப்பை இறக்கி குதிகால்களில் அமரவும். மேலும், இருமுறை திரும்பச் செய்யவும்.
பூரண உஷ்ட்ராசனம் சுவாசத்தை உள்ளிழுத்தபடி வஜ்ராசனத்திலிருந்து முட்டி கால்களில் நிற்கவும். பின்புறமாக வளைந்து குதிகால்களை, கைகளால் பிடித்துக் கொள்ளவும். இந்நிலையில் நாசிகளினால் மூச்சை உள்ளிழுத்து வாய் வழியாக வேகமாக வெளியிட வேண்டும். இவ்வாறு ஐந்து முறையேனும் செய்ய வேண்டும்.
இதனை டையாப்ரம் மற்றும் விலா எலும்களின் இடையே உள்ள தசைகள உணர்ந்து செயல்படுத்த வேண்டும். வெளியேறும் மூச்சு நன்றாக அழுத்தி வேகமாக 'உஷ்ஷ்...' என்ற சப்தத்துடன் காற்றை வெளியேற்ற வேண்டும்.
ஷஷாசனம் வஜ்ராசனத்தில் இருந்து முன்புறம் குனிந்து கால் முட்டிகளுக்கு அருகில் கை முட்டிகளை வைக்கவும். எவ்வளவு முடியுமோ அவ்வளது தலையை மேலே துாக்கி பார்க்கவும். முதுகில் தோன்றும் நீட்டத்தை உணரவும். பிட்டம், குதிகால்களை தொட்டபடி இருக்க வேண்டும். இந்நிலையில் ஆறு முறையேனும் சுவாசத்தை உள்ளிழுத்து வெளியேற்றவும். சுவாசக்காற்றை, நுரையீரலின் கீழ் பகுதியில் சஞ்சரிக்குமாறு செலுத்தப்பட வேண்டும். வஜ்ராசனத்திற்கு திரும்பி, கழுத்தில் வலி தோன்றா வண்ணம் தலையை இருபுறமும் மெதுவாக திருப்ப வேண்டும்.
கீழ்மார்பு சுவாசத்தில் ஆதம் பிராணாயாமம் செய்முறையை அடுத்த வாரம் பார்ப்போம்....
கீழ் மார்பு சுவாச பயிற்சியும், பலன்களும்
கீழ்மார்பு சுவாச பயிற்சியினால், சுவாச மண்டலத்தின் விரியும் தன்மை கூட்டி, சுத்திகரித்து, பலப்படுத்தி அதன் திறமையை அதிகரிக்க செய்கிறது.
முக்கியமாக நுரையீரல், டையாப்ரம், விலா எலும்புகள் அதன் தசைகள் மற்றும் மூச்சு குழாய்களான டிரகியா, ப்ராங்கியல் ட்யூப் இவைகளின் வலிமை கூடுகிறது.

