ADDED : மார் 19, 2026 04:34 AM
புதுச்சேரி: பாஜ.,வை விட்டு ஜான் குமார் வெளியேறுவார் என, அவரது ஆதரவாளர்கள் கூறினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில், புதுச்சேரியில் என்.ஆர்., - பாஜ., - அ.தி.மு.க., ஆகிய கட்சிகள் கூட்டணியில் உள்ளன. லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் லட்சிய ஜனநாயக கட்சியை கூட்டணியில் சேர்க்காமல் இருந்தால் மட்டுமே, தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்., இருக்கும். இல்லையெனில் கூட்டணியை விட்டு வெளியேறுவோம் என, கட்சியின் தலைவரும், முதல்வருமான ரங்கசாமி உறுதியாக கூறிவிட்டார்.
இதனால் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உடன்பாடு ஏற்படாமல், புதுச்சேரியின் பா.ஜ., முக்கிய நிர்வாகிகள் கட்சி தலைவர் ராமலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம் சபாநாயகர் செல்வம் ஆகியோர் டில்லி சென்று கட்சி தலைமையிடம் என்.ஆர்.காங்., நிலைப்பாடு குறித்து பேசினர். இந்நிலையில் நேற்று அமாவாசை என்பதால், பா.ஜ., வை சேர்ந்த அமைச்சர் ஜான்குமாரின் மனைவி ஜஸ்டின், ல.ஜ.க., சார்பில் நெல்லிதோப்பு தொகுதியில் (ஏற்கனவே இவரது மூத்த மகன் ரிச்சர்ட் பாஜ., எம்.எல்.ஏ.,வாக உள்ளார்) போட்டியிட சாரம் துணை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் மனு தாக்கல் செய்தார்.
அதே நேரத்தில் ஜான்குமாரின் மூத்த மகனும், நெல்லித்தொப்பு எம்.எல்.ஏ.,வுமான ரிச்சர்ட் மற்றும் இளைய மகன் ரீகன் ஆகியோர் பாகூர் தொகுதியில் ல.ஜ.க., சார்பில் போட்டியிட தேங்காய்திட்டு மீன்வளத்துறை அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் மனு தாக்கல் செய்தனர்.
பா.ஜ., கூட்டணியில் ல.ஜ.க.,வால் பிரச்னை உள்ள நிலையில், பா.ஜ., அமைச்சரின் மனைவி மற்றும் இரு மகன்கள் தன்னிச்சையாக மனு தாக்கல் செய்தது, அமைச்சர் ஜான்குமார் பா.ஜ.,வில் இருந்து விலகி ல.ஜ.க.,வில் இணைந்து, முதலியார்பேட்டை தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும், அதனால் தான் ஜான்குமாரின் மனைவி, மகன்கள் ல.ஜ.க., சார்பில் போட்டியிட மனு தாக்கல் செய்தனர் என்று ஜான் குமார் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
