/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியை சேர்ந்த பொறியியல் பட்டதாரிகள் ஏக்கம்! தமிழகத்திடம் பாடம் கற்பார்களா அதிகாரிகள்
/
புதுச்சேரியை சேர்ந்த பொறியியல் பட்டதாரிகள் ஏக்கம்! தமிழகத்திடம் பாடம் கற்பார்களா அதிகாரிகள்
புதுச்சேரியை சேர்ந்த பொறியியல் பட்டதாரிகள் ஏக்கம்! தமிழகத்திடம் பாடம் கற்பார்களா அதிகாரிகள்
புதுச்சேரியை சேர்ந்த பொறியியல் பட்டதாரிகள் ஏக்கம்! தமிழகத்திடம் பாடம் கற்பார்களா அதிகாரிகள்
ADDED : பிப் 28, 2024 07:16 AM

சின்னஞ்சிறிய யூனியன் பிரதேசமான புதுச்சேரி கல்விக் கேந்திரமாக திகழ்கிறது. இங்கு மத்திய பல்கலைக்கழகம், மாநில அரசின் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் 2 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ளன.
மருத்துவம், நர்சிங், பல் மருத்துவம் மற்றும் பாராமெடிக்கல் கல்லுாரிகள், சட்டம், பி.எட்., மற்றும் கால்நடை மருத்துவக் கல்லுாரிகள், விவசாயம், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் என அனைத்து படிப்புகளுக்கும் ஏராளமான கல்லுாரிகள் இயங்குகின்றன.
வெளியூர் படையெடுக்கும் இளைஞர்கள்
குறிப்பாக, 12க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லுாரிகளும், 8க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் கல்லுாரிகளும் செயல்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பொறியியலில் டிப்ளமா மற்றும் இளங்கலையில் ஆரம்பித்து, முதுகலை, ஆராய்ச்சி படிப்பு வரை படித்து ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் வெளியே வருகின்றனர்.
ஆனால், பொறியியல் பட்டதாரிகளுக்கு உள்ளூரில் வேலைவாய்ப்பு என்பது குதிரைக்கொம்பாகவே உள்ளது. இதனால், வெளியூர்களை நாடி செல்கின்றனர். சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் பல்லாயிரக்கணக்கான புதுச்சேரி இளைஞர்கள் வேலை செய்கின்றனர். பல்வேறு வெளிநாடுகளுக்கும் பொறியியல் பட்டதாரிகள் பறக்கின்றனர்.
உள்ளூர் வளர்ச்சிக்கு பயன்படுமா?
புதுச்சேரியில் காமராஜர் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கு நிதியுதவி தாராளமாக வழங்கப்படுகிறது. இருந்தபோதும், இங்கு ஐ.டி., பார்க் இல்லாததால், படித்து முடித்துவிட்டு வெளியே வருகின்ற புதுச்சேரியை சேர்ந்த பொறியியல் பட்டதாரிகளின் திறமைகளை உள்ளூரின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலை உள்ளது.
நிலத்தடி நீரை பயன்படுத்தாத, சுற்றுச்சூழலை மாசுப்படுத்தாத தொழிற்சாலைகளுக்கு புதுச்சேரி அரசின் தொழில் கொள்கை முன்னுரிமை அளிக்கிறது. ஐ.டி., பார்க் அமைவதால் சுற்றுச்சூழல் மாசுபடாது; நிலத்தடி நீரும் தேவையில்லை. இருந்தபோதும், ஐ.டி., பார்க் அமைப்பதற்கான நடவடிக்கைகள் வேகம் பெறவில்லை.
கூப்பிடும் துாரத்தில் டைடல் பார்க்
இந்நிலையில், புதுச்சேரியில் இருந்து 5 கிலோ மீட்டர் துாரத்தில் அமைந்துள்ள திருச்சிற்றம்பலத்தில் ஐ.டி., பார்க் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. தமிழக அதிகாரிகள் புயல் வேகத்தில் பணியாற்றி அரசின் அறிவிப்பு செயல்வடிவம் தந்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தின் கடைகோடியில் அமைந்துள்ள திருச்சிற்றம்பலத்தில் நான்கு மாடிகளுடன் 63 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ரூ.31 கோடி செலவில் ஐ.டி., பார்க் கட்டி முடிக்கப்பட்டது. 500 தொழில்நுட்ப வல்லுனர்கள் பணிபுரியும் வசதியுடன் கூடிய மினி டைடல் பூங்கா, கடந்த 17ம் தேதியன்று திறக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் தலைநகராக திகழும் புதுச்சேரியில் ஐ.டி., பார்க் என்பது நிறைவேறாத கனவாக மாறி வருவதாக புலம்பும் உள்ளூர் பொறியியல் பட்டதாரி இளைஞர்கள், திருச்சிற்றம்பலத்தில் அமைக்கப்பட்டுள்ள மினி டைடல் பார்க்கை ஏக்கத்துடன் பார்க்கின்றனர்.

