/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தி.மு.க., - காங்., எம்.எல்.ஏ.,க்கள் குண்டுகட்டாக... வெளியேற்றம்: புதுச்சேரி சட்டசபையில் 42 நிமிடங்கள் அனல் நான்கு சட்ட முன்வரைவுகள் நிறைவேற்றம்
/
தி.மு.க., - காங்., எம்.எல்.ஏ.,க்கள் குண்டுகட்டாக... வெளியேற்றம்: புதுச்சேரி சட்டசபையில் 42 நிமிடங்கள் அனல் நான்கு சட்ட முன்வரைவுகள் நிறைவேற்றம்
தி.மு.க., - காங்., எம்.எல்.ஏ.,க்கள் குண்டுகட்டாக... வெளியேற்றம்: புதுச்சேரி சட்டசபையில் 42 நிமிடங்கள் அனல் நான்கு சட்ட முன்வரைவுகள் நிறைவேற்றம்
தி.மு.க., - காங்., எம்.எல்.ஏ.,க்கள் குண்டுகட்டாக... வெளியேற்றம்: புதுச்சேரி சட்டசபையில் 42 நிமிடங்கள் அனல் நான்கு சட்ட முன்வரைவுகள் நிறைவேற்றம்
ADDED : செப் 19, 2025 03:06 AM

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் குடிநீர் பிரச்னை குறித்து விவாதிக்கக்கோரி அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூண்டோடு, குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து அவர்கள், சபாநாயகரை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. புதுச்சேரி 15வது சட்டசபையின், 6வது பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது கூட்டம் நேற்று காலை 9:38 மணிக்கு துவங்கியது. சபாநாயகர் செல்வம், திருக்குறளை வாசித்து சபை நடவடிக்கைகளை தொடங்கினார்.
தொடர்ந்து, மறைந்த போப் பிரான்சிஸ், கேரள மாநில முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபுசோரன், புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ., லோகநாதன், நாகலாந்து முன்னாள் கவர்னர் இல.கணேசன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் வாசிக்க தொடங்கினார்.
அப்போது, சுயேச்சை எம்.எல்.ஏ., நேரு குறுக்கிட்டு பேசினார். அதேநேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் சிவா குறுக்கிட்டு பேசுகையில், நகரப்பகுதியில் குடிநீரில் கழிவு நீர் கலந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விவாதிக்க சட்டசபையை 10 நாட்களாவது நடத்த வேண்டும். கழிவு நீர் கலந்த குடிநீர் குடித்து 3 பேர் இறந்துள்ளனர். இது தொடர்பாக பேசக்கூட அனுமதிக்கவில்லை.
கடந்த கூட்டத்தில், அறிவித்த திட்டங்கள் எதுவும் செயல்பாட்டிற்கு வரவில்லை. மத்திய பா.ஜ., அரசு புதுச்சேரிக்கு எதுவும் செய்யவில்லை. ஊசுடு ஏரி மற்றும் பெண்ணையாற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வருவோம் என்றீர்கள். அது என்ன ஆனது என கேள்வி எழுப்பினர்.
அப்போது சபாநாயகர் செல்வம், 'இதுகுறித்து அவை முன்னவரான முதல்வருடன் கலந்து ஆலோசித்து கூறப்படும்' என்றார். 'நீங்கள் சொன்னால்தான் இருக்கையில் அமர்வோம்' எனக்கூறியபடி எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், தியாகராஜன், காங்., எம்.எல்.ஏ.,க்கள் வைத்தியநாதன், ரமேஷ்பரம்பத் ஆகியோர் கோஷமிட்டபடி, சபாநாயகர் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அவர்களை வெளியே துாக்கிப் போட சபாநாயகர் கூறியதை தொடர்ந்து, தர்ணாவில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களை சபை காவலர்கள் குண்டுக்கட்டாக துாக்கிச் சென்று சட்டசபை மைய மண்டபத்தில் வெளியேற்றினர்.
அதேபோல், சபாநாயகர் இருக்கை முன் நின்று, அவரை விமர்சித்துக் கொண்டிருந்த சுயேச்சை எம்.எல்.ஏ., நேருவையும் சபை காவலர்கள் வெளியேற்றனர். வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அரசை கண்டித்தும், சபாநாயகரை கண்டித்து மைய மண்டபத்தில் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அதேநேரத்தில் சபாநாயாகர், சுயேச்சை எம்.எல்.ஏ., நேரு பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து நடந்த கூட்டத்தில், முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கொண்டு வந்த வணிகம் செய்தலை எளிதாக்கும் சேவை, சரக்கு மற்றும் சேவை வரி திருத்தம், நகராட்சி, கிராம கொம்யூன் பஞ்சாயத்து சட்ட திருத்தங்கள், நகரம் மற்றும் கிராமத் திட்டமிடல் ஆகிய 4 சட்ட முன்வரைவுகள் இயற்றப்பட்டன.
இறுதியாக பிரதமர் மோடிக்கு அரசு சார்பில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த சபாநாயகர் செல்வம், காலை 10:20 மணிக்கு சபை நடவடிக்கையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.