/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் 1,03,467 வாக்காளர்கள்... நீக்கம்:பெயர் சேர்க்க ஜன.15வரை காலக்கெடு
/
புதுச்சேரியில் 1,03,467 வாக்காளர்கள்... நீக்கம்:பெயர் சேர்க்க ஜன.15வரை காலக்கெடு
புதுச்சேரியில் 1,03,467 வாக்காளர்கள்... நீக்கம்:பெயர் சேர்க்க ஜன.15வரை காலக்கெடு
புதுச்சேரியில் 1,03,467 வாக்காளர்கள்... நீக்கம்:பெயர் சேர்க்க ஜன.15வரை காலக்கெடு
UPDATED : டிச 17, 2025 05:10 AM
ADDED : டிச 17, 2025 05:09 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 467 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். விடுபட்டவர்கள் பெயரை சேர்க்க வரும் ஜன.15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் நிருபர்களிடம் கூறியதாவது;
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. அதில், மாநிலத்தில், 10,21,578 வாக்காளர்கள் இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கடந்த நவ.4ம் தேதி முதல் கடந்த 11ம் தேதிவரை வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணியில் 962 ஓட்டுச்சாவடி அலுவலர்கள், 2,729 ஓட்டச்சாவடி முகவர்கள் மூலம், 10 லட்சத்து 21 ஆயிரத்து 578 வாக்காளர்களுக்கும் வீடு தேடிச் சென்று கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டது.
![]() |
![]() |
![]() |
இறப்பு 2 சதவீதம்
பின்னர் பூர்த்தி செய்த படிவங்களை கடந்த 11ம் தேதி வரை திரும்ப பெறப்பட்டது. அதில், 9,18,111 படிவங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது. இது வழங்கிய கணக்கெடுப்பு படிவங்களில் 90 சதவீதமாகும். ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 467 பேர் படிவங்களை திரும்ப தரவில்லை. அவர்களில் இறப்பு 20 ஆயிரத்து 798 (2 சதவீதம்), குடி பெயர்ந்தவர்கள் 80,645 (8 சதவீதம்), இரட்டை பதிவில் 2,024 (0.2 சதவீதம்) ஆகும்.
நீக்கல் பட்டியல்
நீக்கப்பட்ட வாக்காளர் விபரங்கள் அடங்கிய பட்டியல் ஓட்டுச்சாவடி வரியாக அந்தந்த தொகுதி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தால் தயாரிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியல்
கணக்கெடுப்பு படிவங்கள் திரும்ப வழங்காதவர்கள் பெயர்களை நீக்கி, வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், மாநிலத்தில், 4,31,301 ஆண்கள், 4,86,673 பெண்கள், 137 இதரர் என, மொத்தம் 9,18,111 பேர் இடம் பெற்றுள்ளனர்.
71 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ்
தற்போதைய வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில், 71,428 பேரின் ஆவணங்கள், 2002 வாக்காளர் பட்டியலுடன் ஒத்து போகவில்லை. அதனால், அவர்களுக்கு அந்தந்த ஓட்டுச்சாவடி நிலை அதிகாரி மூலம் நோட்டீஸ் வழங்கப்படும். அவர்கள், தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 13 ஆவணங்களை சமர்ப்பித்து, தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க உரிமை கோரலாம்.
நீக்கத்தில் முதலிடம் வாக்காளர் பட்டியில் சிறப்பு திருத்தப் பணியில் அதிகப்பட்டசமாக காமராஜ் நகர் தொகுதியில் 6,525ம், உழவர்கரை தொகுதியில் 6,139 பேரும், காரைக்கால் வடக்கில் 5,129, ராஜ்பவன் தொகுதியில் 4,680 மற்றும் காரைக்கால் தெற்கில் 4,422 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். குறைந்த பட்சமாக மாகியில் 89 பேரும், பாகூரில் 1,651 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
பெயர் சேர்க்க வாய்ப்பு
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் தங்கள் ஆட்சேபனையையும், புதிய வாக்காளர்கள் படிவம் 6ஐ வரும் ஜனவர 15ம் தேதிக்குள் ஓட்டுச்சாவடி அலுவலரிடம் வழங்க வேண்டும். அதனை ஆய்வு செய்து தகுதி உடையவராக இருப்பின் அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு, வரும் பிப்ரவரி 14ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.




