/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அனுமதி பெறாத விளம்பர பலகைகள் அகற்றப்படுமா? கலெக்டரிடம் பா.ஜ., எம்.எல்.ஏ., மனு
/
அனுமதி பெறாத விளம்பர பலகைகள் அகற்றப்படுமா? கலெக்டரிடம் பா.ஜ., எம்.எல்.ஏ., மனு
அனுமதி பெறாத விளம்பர பலகைகள் அகற்றப்படுமா? கலெக்டரிடம் பா.ஜ., எம்.எல்.ஏ., மனு
அனுமதி பெறாத விளம்பர பலகைகள் அகற்றப்படுமா? கலெக்டரிடம் பா.ஜ., எம்.எல்.ஏ., மனு
ADDED : மே 17, 2024 05:35 AM

புதுச்சேரி: புதுச்சேரியில், அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும், விளம்பர பலகைகளின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என கலெக்டரிடம், அசோக்பாபு எம்.எல்.ஏ., மனு அளித்தார்.
மனு விபரம்:
புதுச்சேரி மாநிலத்தில் நகர மற்றும் கிராம பகுதிகளில் நாளுக்கு நாள் விளம்பர பலகைகள் அதிகரித்து வருகின்றன. இவை முறையாக அனுமதி பெற்று வைக்கப்படுகிறதா, அனுமதி பெற்று வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளுக்கு ஆண்டுதோறும் அனுமதி முறையாக புதுப்பிக்கப்படுகிறதா, இதை எல்லாம் அரசு துறைகள் உறுதிப்படுத்துகின்றதா என்பது தெரியவில்லை.
புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து சாலைகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டமும் அதிகளவில் உள்ளது. பருவமழை முன்கூட்டியே துவங்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை தொடங்கினால், காற்று வீசும்.
எனவே, உறுதித்தன்மை குறைவாக உள்ள விளம்பர பலகைகள் முறிந்து விழுந்து உயிர் சேதம் ஏற்படாமல், மக்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக, பொதுமக்களின் நலன் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில் கலெக்டர் தனி கவனம் செலுத்தி, விளம்பர பலகைகளின் அளவு, உரிமம், உறுதித்தன்மை குறித்து ஆய்வு நடத்த வேண்டும்.
அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள, உறுதித்தன்மை குறைவாக உள்ள விளம்பர பலகைகள் அனைத்தையும் உடனடியாக அகற்ற வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்று கொண்ட கலெக்டரிடம், மும்பையில் சில நாட்களுக்கு முன் வீசிய புழுதி புயலில் பிரமாண்டமான விளம்பர பலகை சரிந்து விழுந்ததில் 16 பேர் உயிரிழந்தது, 70க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததை அசோக்பாபு எம்.எல்.ஏ., சுட்டிக் காட்டினார். அதுபோன்ற துயர சம்பவங்கள் புதுச்சேரியில் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதுதொடர்பாக, கமிட்டி அமைத்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக, கலெக்டர் உறுதியளித்தார்.

