/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பழுதடைந்த பவர் டிரான்ஸ்பார்மர் சீரமைக்கப்படுமா
/
பழுதடைந்த பவர் டிரான்ஸ்பார்மர் சீரமைக்கப்படுமா
ADDED : மே 20, 2024 05:10 AM
திருக்கனுார், : தேத்தாம்பாக்கம் துணை மின் நிலையத்தில் இயங்கி வந்த பவர் டிரான்ஸ்பார்மர் பழுதடைந்து, 4 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரையில் சீரமைக்கப்படாததால், கிராம புறங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.
திருக்கனுார் அடுத்த தேத்தாம்பாக்கம் துணை மின் நிலையத்தில் இயங்கிய இரண்டு பவர் டிரான்ஸ்பார்மர் மூலம் திருக்கனுார் மற்றும் காட்டேரிக்குப்பம் இளநிலை பொறியாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் வழங்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், துணை மின் நிலையத்தில் இயங்கி வந்த இரண்டு பவர் டிரான்ஸ்பார்மரில், ஒரு டிரான்ஸ்பார்மர் கடந்த ஜனவரி 16ம் தேதி ஏற்பட்ட தீவிபத்து காரணமாக, இன்சுலேட்டர் வெடித்து சேதமடைந்து. இதனால், 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது.
இதையடுத்து, துணை மின் நிலையத்தில் இயங்கிய மற்றொரு பவர் டிரான்ஸ்பார்மர் மூலம் தற்காலிகமாக காட்டேரிக்குப்பம் பகுதிகளுக்கும், திருபுவனை துணை மின் நிலையம் மூலம் திருக்கனுார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் சுழற்சி முறையில் மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், பவர் டிரான்ஸ்பார்மர் பழுதடைந்து 4 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரையில் சீரமைக்கப்படாததால், இப்பகுதிகளில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக, அடிக்கடி மின்தடை ஏற்பட்டு பல மணி நேரம் தொடர்கிறது.
குறிப்பாக, இரவு நேரங்களில் ஏற்படும் மின் தடையால், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, தொடர் மின்தடையை தவிர்க்க, பழுதடைந்துள்ள பவர் டிரான்ஸ்பார்மரை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

