/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புறவழிச்சாலை பணியால் போக்குவரத்து பாதிப்பு
/
புறவழிச்சாலை பணியால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஏப் 02, 2024 04:40 AM

பாகூர், : பாகூர் -பிள்ளையார்குப்பம் சாலை மூடப்பட்டதை கண்டித்து, புற வழிச்சாலை பணியில் ஈடுபடும் லாரிகளை சிறை பிடித்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே புறவழிச்சாலை அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்துவருகிறது. இதனால் , கிராமங்களை இணைக்கும் சாலைகளில் போக்குவரத்து தடைபட்டு வருகிறது. குறிப்பாக, பாகூரில் இருந்து பின்னாட்சிக்குப்பம்,சார்காசிமேடு வழியாக பிள்ளையார்குப்பம் செல்லும் சாலையின் குறுக்கே புறவழிச்சாலை குறுக்கிடுவதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த இணைப்பு சாலையைபயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.இல்லையெனில், போராட்டத்தில் ஈடுபடுவோம் என அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
அரசு தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலை பின்னாட்சிக்குப்பம் சந்திப்பு பகுதியில், சாலை கட்டுமான பணியில் ஈடுபட்ட லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த பாகூர் தாசில்தார் கோபாலக்கிருஷ்ணன், பாகூர் சப் இன்ஸ்பெக்டர் நந்தக்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வரும் பாகூர் சாலையை மூட கூடாது, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இது தொடர்பாக, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் எழுத்து பூர்வமாக உறுதி அளிக்க வேண்டும்.
இல்லையெனில், வரும் லோக்சபா தேர்தலை புறக்கணிப்போம் என்றனர். இதனிடையே, ஏம்பலம் தொகுதி காங்., பிரமுகர் மோகன்தாஸ் தனது ஆதரவாளருடன் போராட்டத்திற்கு பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி, இது தொடர்பாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
பின்னர், மண் கொட்டப்பட்டு தற்காலிகமாக பாகூர் சாலையில் வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து, பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார். இதனால், புறவழிச்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

