/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போலீசார், துணை ராணுவம் தொடர் கண்காணிப்பு
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போலீசார், துணை ராணுவம் தொடர் கண்காணிப்பு
ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போலீசார், துணை ராணுவம் தொடர் கண்காணிப்பு
ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போலீசார், துணை ராணுவம் தொடர் கண்காணிப்பு
ADDED : ஏப் 21, 2024 05:26 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில், 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரியில் நேற்று முன்தினம் நடந்த லோக்சபா தேர்தலில் 78.57 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன. மாநிலத்தில்,புதுச்சேரி - 739; காரைக்கால் - 164; மாகி - 31; மற்றும் ஏனாம் -33, என, மொத்தம் 967 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. வழக்கம் போலவே,காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது.
அரியாங்குப்பம், காமராஜர் நகர், குருவிநத்தம், நோனாங்குப்பம், நைனார் மண்டபம், சுல்தான்பேட்டை, கூனிச்சம்பட்டு உட்பட பல இடங்களில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதானது.
இதையடுத்து உடனடியாக,அந்த ஓட்டுச்சாவடிகளில், மாற்று இயந்திரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, ஓட்டுப்பதிவு துவங்கியது. இதன் காரணமாக, அந்த ஓட்டுச்சாவடிகளில் மட்டும்இரவு 7:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது.
ரெயின்போ நகர் சத்யா பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச்சாவடியில், ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது காரணமாக, புதிய இயந்திரம் மாற்றப்பட்டது. ஆனாலும் அங்கு ஓட்டுப்பதிவு மெதுவாக நடந்தது. இதனால் பல வாக்காளர்கள் வாக்களிக்காமல், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும்ஓட்டுப்பதிவு நிறைவடைந்த பிறகு, வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து,வாகனங்கள் மூலம் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்போடு ஓட்டு எண்ணும் மையங்களுக்கு, அந்த இயந்திரங்கள்கொண்டு செல்லப்பட்டன.
புதுச்சேரியில் லாஸ்பேட்டையில் அரசு மகளிர் பொறியியல் கல்லுாரி, மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லுாரி, காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரி வளாகத்தில் உள்ள கருணாநிதி பட்டமேற்படிப்பு மையம், மாகியில் ஜவஹர்லால் நேரு அரசு மேல்நிலைப்பள்ளி, ஏனாமில், டாக்டர் எஸ்.ஆர்.கே கலைக்கல்லுாரி ஆகியவற்றில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்துஅந்த அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் கண்காணிக்கும் வகையில், மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ஓட்டு எண்ணிக்கை மையத்தை சுற்றி, சி.சி.டி.வி., கேமராக்களும் போடப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும், 7 கட்டங்களாக லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடக்கிறது.
முதற்கட்டத்திலேயே, புதுச்சேரியில் ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. தொடர்ந்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்துதேர்தல் நடந்து முடிந்த பிறகு வரும், ஜூன், 4ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

