/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏனாமில் சட்டத்திற்கு உட்பட்ட ஆட்சி நடக்கவில்லை
/
ஏனாமில் சட்டத்திற்கு உட்பட்ட ஆட்சி நடக்கவில்லை
ADDED : ஏப் 15, 2024 03:54 AM

புதுச்சேரி, : ஏனாமில் நடக்கும் சூதாட்டங்களால் கலவர பூமியாக மாற்றி வைத்துள்ளதாக அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் கூறினார்.
புதுச்சேரி லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் நேற்று ஏனாம் தொகுதியில் பிரசாரம் செய்தார்.
அப்போது நிருபர்களிடம் கூறியதாவது; ஏனாமில் கடந்த சட்டசபை தேர்தலில் எதிரும் புதிருமாக போட்டியிட்ட முதல்வர் ரங்கசாமி, அவருக்கு ஆதரவாக செயல்பட்ட மல்லாடிக்கிருஷ்ணாராவ், சுயேச்சை எம்.எல்.ஏ., கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக் ஆகிய மூவரும் சேர்ந்து பா.ஜ.வுக்கு ஓட்டு சேகரிப்பது வியப்பாக உள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக முதல்வர், மல்லாடி கிருஷ்ணாராவை எதிர்த்து அரசியல் செய்த சுயேட்சை எம்.எல்.ஏ., தற்போது பா.ஜ.வுக்கு ஓட்டு சேகரிப்பது சந்தர்ப்பவாத அரசியல். ஏனாமில் பல ஆண்டு காலமாக அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளது. இந்திய அளவில் மிகப்பெரிய சூதாட்ட பகுதியாக ஏனாம் மாற்றப்பட்டுள்ளது. தினமும் பல மாநிலத்தில் இருந்து ஏராளமானோர் ஏனாம் வந்து சூதாட்டத்தில் ஈடுப்படுகின்றனர்.
பா.ஜ., ஆதரவுடன், தொகுதி எம்.எல்.ஏ.,வின் நேரடி கண்காணிப்பில் ஒரு நாளைக்கு ரூ. 4 கோடி வரை சூதாட்டம் நடக்கிறது. இந்த சூதாட்டங்களால் ஏனாமை கலவர பூமியாக மாற்றி வைத்துள்ளனர்.
ஏனாமில் நடக்கும் சூதாட்டங்களை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கண்டுகொள்வதில்லை. இங்கு சட்டத்திற்கு உட்பட்ட ஆட்சி நடக்கவில்லை. ஏனாமில் உள்ள மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. சுகாதாரமான குடிநீர் வசதி கூட இல்லை. ஆட்சி அமைத்து 3 ஆண்டுகளில் ஏனாம் மக்களுக்கு எதையும் நிறைவேற்றாமல், வெற்றி பெற்ற பின்பு நிறைவேற்றி தருவதாக பொய் கூறுகின்றனர். இதனால் தேசிய கட்சிகளான பா.ஜ., மற்றும் காங்., கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என கூறினார்.

