/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தமிழ்ப் புத்தாண்டு: தலைவர்கள் வாழ்த்து
/
தமிழ்ப் புத்தாண்டு: தலைவர்கள் வாழ்த்து
ADDED : ஏப் 14, 2024 05:01 AM
புதுச்சேரி: தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு கவர்னர், முதல்வர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கவர்னர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், 'உலகமெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டு அனைவரது வாழ்விலும் அன்பும், அமைதியும் நிலைக்கவும், இன்பமும் மகிழ்ச்சியும் பெருகவும் ஆரோக்கியமான வாழ்வு சிறக்கவும் வழிவகை செய்யட்டும் என்று வாழ்த்துகிறேன்.
அனைவரும் மகிழ்ச்சியோடு, பிறருக்கு உதவி செய்து, நாட்டின் வளர்ச்சியில் நமது பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு செயலாற்ற உறுதியேற்று தமிழ்ப் புத்தாண்டை சிறப்பாகக் கொண்டாடுவோம்' என தெரிவித்துள்ளார்.
முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 'தமிழ்ப்புத்தாண்டை கொண்டாடி மகிழும், தமிழ் மக்களுக்கு எனது உளம் நிறைந்த வாழ்த்துக்கள். தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களுள் ஒன்றாகிப்போன, தமிழ்ப்புத்தாண்டு, தமிழர் வாழ்வியலோடு, ஆழமாக வேரூன்றி உள்ள பாரம்பரிய கலாசார பெருமைகளை உலகிற்கு எடுத்துக்கூறும் ஓர் உன்னத பண்டிகையாகும்.
நம்மையெல்லாம், ஒரு சமூகமாக இணைக்கும் தமிழ் மரபுகளை போற்றி புதிய நம்பிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்போம். இந்த தமிழ்ப்புத்தாண்டு, அனைவரது வாழ்விலும் நிறைந்த வளம், மிகுந்த மன மகிழ்ச்சியை கொண்டு வந்து சேர்ப்பதாக அமையட்டும்' என தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 'இன்று பிறக்கின்ற குரோதி ஆண்டில் அனைவர் வாழ்விலும் நன்மைகள் ஏற்படவும், இல்லங்களில் மகிழ்ச்சி தங்கவும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.
மலையாள மொழி பேசும் மக்களின் புத்தாண்டான சித்திரை விஷூ திருநாள் நல்வாழ்த்துகளை மாகி மக்களுக்கும், புதுச்சேரியில் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்களுக்கும் தெரிவிக்கிறேன்' என கூறியுள்ளார்.
மேலும், பா.ஜ வேட்பாளர் நமச்சிவாயம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன், அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு செயலாளர் ஓம் சக்தி சேகர் உள்ளிட்டோரும், புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

