/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திட்ட அங்கீகார சான்றிதழ் கிடைத்த உடன் தெரு நாய்களுக்கு கருத்தடை, தடுப்பூசி
/
திட்ட அங்கீகார சான்றிதழ் கிடைத்த உடன் தெரு நாய்களுக்கு கருத்தடை, தடுப்பூசி
திட்ட அங்கீகார சான்றிதழ் கிடைத்த உடன் தெரு நாய்களுக்கு கருத்தடை, தடுப்பூசி
திட்ட அங்கீகார சான்றிதழ் கிடைத்த உடன் தெரு நாய்களுக்கு கருத்தடை, தடுப்பூசி
ADDED : மே 15, 2024 01:09 AM
புதுச்சேரி : உழவர்கரை நகராட்சிக்கு இந்திய விலங்கு நல வாரியத்திடம் இருந்து திட்ட அங்கீகார சான்றிதழ் கிடைத்த உடன், தெரு நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி போடும் பணிகள் நடக்க உள்ளதாக ஆணையர் சுரேஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், தெருநாய்கள் அதிகரித்து வருவதால், அவற்றை பிடித்து, அப்புறப்படுத்துமாறு பொதுமக்களிடம் இருந்து நகராட்சிக்கு புகார்கள் தொடர்ந்து வருகிறது.
இதையடுத்து, பொதுமக்களின் நலன் கருதி, நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றி திரியும் தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு, ஐதராபாத்தில் உள்ள, அரசு சாரா நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
அந்த நிறுவனம் கடந்த, 2023ம் ஆண்டு, ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை, 1,111 தெருநாய்களை பிடித்து, விலங்கு பிறப்பு கட்டுப்பாடு செய்து வெறி பிடிக்காமல் இருக்க, ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசிகள் செலுத்தி, இந்திய விலங்குகள் நல வாரியத்தின் விதிகளின்படி, பிடிக்கப்பட்ட இடங்களில் மீண்டும் விடுவிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையில் சில விலங்குகள் நல அமைப்பு ஆர்வலர்கள், இந்திய விலங்குகள் நல வாரிய விதி, 2023ன் படி, அனைத்து அமைப்பு சாரா நிறுவனங்களும், இந்திய விலங்கு நல வாரியத்தின் திட்ட அங்கீகாரம் சான்றிதழ் பெற்று, கருத்தடை மற்றும் ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளை செய்ய வேண்டும் என, இந்திய விலங்க நல வாரியத்திடம் புகார் அளித்தன.
அதன் அடிப்படையில், இந்திய விலங்கு நலவாரியம் திட்ட அங்கீகாரம் பெறுமாறு நகராட்சியை கடிதம் மூலம் அறிவுறுத்தி உள்ளது. மேலும், அதுவரை பணியினை நிறுத்தும் படி அறிவுறுத்தியது.
இதைத்தொடர்ந்து, உழவர்கரை நகராட்சி தற்போது கட்டமைப்பு வசதியை மேம்படுத்தி, திட்ட அங்கீகாரம் வேண்டி, இந்திய விலங்கு நல வாரியத்திடம் விண்ணப்பிக்க உள்ளது. திட்ட அங்கீகார சான்றிதழ் கிடைத்த உடன், சில மாதங்களில், தெரு நாய்களுக்கு மீண்டும் கருத்தடை மற்றும் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

