/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகள் கையில் இருந்தால் விண்வெளி துறையில் தொழில் முனைவராகலாம்: இஸ்ரோ விஞ்ஞானி ராஜராஜன் பேச்சு
/
புதிய தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகள் கையில் இருந்தால் விண்வெளி துறையில் தொழில் முனைவராகலாம்: இஸ்ரோ விஞ்ஞானி ராஜராஜன் பேச்சு
புதிய தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகள் கையில் இருந்தால் விண்வெளி துறையில் தொழில் முனைவராகலாம்: இஸ்ரோ விஞ்ஞானி ராஜராஜன் பேச்சு
புதிய தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகள் கையில் இருந்தால் விண்வெளி துறையில் தொழில் முனைவராகலாம்: இஸ்ரோ விஞ்ஞானி ராஜராஜன் பேச்சு
ADDED : மார் 30, 2024 07:09 AM

புதுச்சேரி: புதிய தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகள் இருந்தால் விண்வெளி துறையில் தொழில் முனைவாராக மாற முடியும் என இஸ்ரோ விஞ்ஞானி ராஜராஜன் பேசினார்.
'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
பூமி தாய் அனைத்தையும் நமக்கு தருகிறாள். ஆனால் மனிதன் பேராசை காரணமாக எல்லா வளங்களையும் அழிக்கின்றான். இப்போது இருக்கின்ற ஆக்சிஜன் உள்பட அனைத்து வளங்களும் ஒருநாளில் முடிவுக்கு வந்தால் உலகம் என்னாவது? உயிர்கள் எங்கே போவது?
அதனால் தான் உலக நாடுகள் அனைத்தும் வேறுகிரகத்தினை நோக்கி ஆய்வினை நடத்துகின்றன. இப்போதைய நவீன தொழில் நுட்ப வளர்ச்சியில் வேறு கிரகங்களில் மனிதர்கள் குடி பெயர்வது சாத்தியமே. அதனால் தான் மற்ற உலக நாடுகளை போலவே இந்தியாவும் விண்வெளியில் வலுவாக கால் பதித்து வருகின்றது.
எல்லையற்ற அண்டவெளியில் பூமி என்பது ஒரு சிறு துாசு அளவு மட்டுமே. அதில்தான் நாம் வசிக்கின்றோம். அப்படியென்றால், நாம் இன்னும் ஆராய்ச்சி செய்ய வேண்டியது எவ்வளவு உள்ளது என்பதை, மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
விண்வெளி ஆராய்ச்சி தொழில் நுட்ப படிப்புகளில், ராக்கெட் ஏவுதல் மற்றும் செயற்கைக்கோள் அனுப்புவது மட்டும் வேலையல்ல. பூமியில் உள்ள பல்வேறு வகை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியும்.
பேரிடர் மேலாண்மை, போக்குவரத்து, பாதுகாப்பு, தொலைத்தொடர்பு, வேளாண் நிலங்களின் வகைப்பாடு, கடல்கள், காடுகள் ஆராய்ச்சி, இயற்கை வளங்களை கண்டறிதல், குற்றத்தடுப்பு என எண்ணற்ற வேலைகளும், தொழில்நுட்பங்களும், விண்வெளி ஆராய்ச்சிகளை மையப்படுத்தியே அமைந்துள்ளன.
விண்வெளியில் தற்போது ரூ.24 ஆயிரம் கோடி புழக்கம் உள்ளது. இதனை 2047ம் ஆண்டிற்கு ரூ. 2.40 லட்சம் கோடியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதனால், விண்வெளியில் புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள் வைத்திருப்பவர்கள் தொழில் முனைவோராக அதிக வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் பொருளாதார ரீதியாக முன்னேறும்போது நாட்டின் பொருளாதாரமும் உயரும். ராக்கெட் ஏவுதல் வெறும் 5 சதவீதம் தான். மற்ற 95 சதவீதம் மக்களின் பயன்பாட்டிற்கான செயற்கைகோள்கள் தான் விண்ணில் செலுத்தப்படுகின்றன.
வேற்றுக் கிரகங்களுக்கு மனிதர்கள் செல்லும்போது அந்த கிரகத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப கட்டுமான பணிக்கு இன்ஜினியர்களும், டாக்டர்களும் தேவைப்படுவர். வேற்றுக் கிரகங்களுக்கு செல்வது வெறும் விண்வெளி வீரர்களுக்கு மட்டும் வாய்ப்புகளை திறந்து விடவில்லை. மருத்துவர், இன்ஜினியர் என பலருக்கும் வாய்ப்புகளை திறந்துவிடப்பட்டுள்ளது.
இஸ்ரோ போன்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு நிறுவனங்களில், பல்வேறு வேலை வாய்ப்புகளும் உள்ளன. எனவே, மாணவர்கள் விண்வெளி சார்ந்த இன்ஜினியரிங் குறித்த எதிர்காலத்தை நன்றாக தெரிந்து, தங்கள் படிப்பை தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

