/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'அனைவரும் கடமையை சரியாக செய்தால் சமுதாய மாற்றம் தானாக உருவாகும்' கவர்னர் ராதாகிருஷ்ணன் அறிவுரை
/
'அனைவரும் கடமையை சரியாக செய்தால் சமுதாய மாற்றம் தானாக உருவாகும்' கவர்னர் ராதாகிருஷ்ணன் அறிவுரை
'அனைவரும் கடமையை சரியாக செய்தால் சமுதாய மாற்றம் தானாக உருவாகும்' கவர்னர் ராதாகிருஷ்ணன் அறிவுரை
'அனைவரும் கடமையை சரியாக செய்தால் சமுதாய மாற்றம் தானாக உருவாகும்' கவர்னர் ராதாகிருஷ்ணன் அறிவுரை
ADDED : மே 18, 2024 06:25 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் கஞ்சா ஜீரோ நிலைக்கு வர வேண்டும் என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கவர்னர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
புதிய குற்றவியல் தண்டனைச் சட்டங்கள் குறித்து போலீஸ் மற்றும் சட்டத்துறை அதிகாரிகளுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரி அரங்கில் துவங்கியது.
முகாமை துவக்கி வைத்து கவர்னர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது;
சில மாதத்திற்கு முன்பு புதுச்சேரி சிறுமி கஞ்சா நபர்களால் சீரழிக்கப்பட்டு, உயிரிழந்த செய்தி அறிந்து மனம் பதைக்காதவர்கள் கிடையாது. குற்றம் செய்தவர்களுக்கு அதற்குரிய தண்டனையை உடனே பெற்று தர வேண்டும். ஆனால் அது நடைமுறையில் சாத்தியம் ஆகவில்லை. இன்றைய சட்டங்களை வைத்து பெரிய வழக்கறிஞர்கள் குற்றவாளிகளுக்கு சார்பாக வாதிடும்போது, அவர்கள் தப்பி விடுகின்றனர்.
பல வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை விட தப்பித்து செல்வது அதிகம். இதுதொடர்ச்சியாக நடந்தால், நேர்மையாக கடமையாற்றும் அதிகாரியின் மன நிலையில் தொய்வு ஏற்படும்.
லஞ்சம் வாங்குபவன் ஐரோப்பாவில் சொகுசு விடுதி வாங்குவதைப் பார்க்கும் சாதாரண மனிதனுக்கு, எந்த தவறு செய்தாலும் பணம் இருந்தால் தப்பித்து கொள்ளலாம் என்ற நினைப்பு வரும்.
எனவே, சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். நல்லவர்களை காப்பாற்ற வேண்டுமானால், குற்றம் செய்தவர்களை கடுமையாக தண்டிப்பது மட்டுமே ஒரே வழி.
கவர்னராக பொறுப்பேற்று கொண்ட உடனே, தலைமைச் செயலர், டி.ஜி.பி., மற்றும் உயர் அதிகாரிகளையும் அழைத்து, புதுச்சேரியில் கஞ்சா ஜீரோ என்ற நிலைக்கு வர வேண்டும் என கூறினேன்.
புதுச்சேரி பெற்றோர்களுக்கு தன்னுடைய பிள்ளை நன்றாக படிக்க வேண்டும் என்பதை காட்டிலும் போதைக்கு அடிமையாகி விடக்கூடாது என்ற மன உளைச்சல் இருக்கிறது. பிள்ளைகள் எங்கே வெளியே சென்றாலும் வீட்டிற்கு நல்ல முறையில் திரும்பி வருவார்கள் என்ற சமூக சூழ்நிலையை நாம் உருவாக்க வேண்டும். எல்லோரும் தன்னுடைய கடமையை சரியாக செய்கிறபோது சமுதாய மாற்றம் தானாக உருவாகும்.
நாம் வாழுகின்ற நாட்களில், எப்படி சமுதாயத்திற்கு பயனுள்ளவர்களாக மாறப்போகிறோம் என்பது தான் எதிர்கால சந்ததிக்கு பாதுகாப்பானதாக, வலுவானதாக அமையும்.
நாம் இந்த சமுதாயத்திற்கு என்ன செய்ய முடியும் என்கிற உணர்வு, அரசு அதிகாரிகளுக்கும், ஆட்சியாளர்களும் வரும்போது, சமுதாய மாற்றம் தானாக ஏற்படும்.
இவ்வாறு கவர்னர் பேசினார்.

