/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் கடந்த ஆண்டு சைபர் மோசடி ... அதிகரிப்பு; அடிதடி, கொலை குற்றங்கள் குறைவால் ஆறுதல்
/
புதுச்சேரியில் கடந்த ஆண்டு சைபர் மோசடி ... அதிகரிப்பு; அடிதடி, கொலை குற்றங்கள் குறைவால் ஆறுதல்
புதுச்சேரியில் கடந்த ஆண்டு சைபர் மோசடி ... அதிகரிப்பு; அடிதடி, கொலை குற்றங்கள் குறைவால் ஆறுதல்
புதுச்சேரியில் கடந்த ஆண்டு சைபர் மோசடி ... அதிகரிப்பு; அடிதடி, கொலை குற்றங்கள் குறைவால் ஆறுதல்
ADDED : ஜன 14, 2025 11:55 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 2023ம் ஆண்டை காட்டிலும், 2024ம் ஆண்டு குற்ற வழக்குகள் குறைந்துள்ளது. அதே வேளையில் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளது.
புதுச்சேரி சுற்றுலாத்துறையில் வளர்ந்து வரும் சின்னஞ்சிறிய யூனியன் பிரதேசம். காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியத்தை உள்ளடக்கியது. தமிழகத்துடன் ஒப்பிடும்போது, ஒரு மாவட்டத்திற்கு இணையான நிலப்பரப்பு கொண்ட யூனியன் பிரதேசமாக இருந்தாலும், சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து என 49 போலீஸ் நிலையங்கள் உள்ளது. டி.ஜி.பி., ஐ.ஜி., டி.ஐ.ஜி., சீனியர் எஸ்.பி.க்கள் என 10 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உள்ளனர். குறிப்பாக நகர பகுதியில் கூப்பிடும் துாரங்களில் போலீஸ் ஸ்டேஷன்கள் அமைத்துள்ளது.
சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் இடம் என்பதால், சட்டம் ஒழுங்கு பிரச்னையில் ஆளும் அரசு அதிக கவனம் செலுத்தியது. இதன் காரணமாக, போலீசாரும் ரவுடிகளின் செயல்களை முன்னரே கண்டறிந்து கைது செய்யும் வகையில், ஆப்ரேஷன் திரிசூல் என்ற திட்டத்தை துவக்கினர்.
மாதந்தோறும் ஏதேனும் ஒரு நாள், புதுச்சேரியில் உள்ள ஒட்டுமொத்த ரவுடிகள் வீடுகளிலும் அதிகாலை நேரத்தில் திடீர் சோதனை நடத்தி ஆயுதங்களை பறிமுதல் செய்து கைது நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால் பல ரவுடிகள் புதுச்சேரியில் தங்குவதை தவிர்த்து, அருகில் உள்ள தமிழக பகுதியான ஆரோவில், கோட்டக்குப்பம், விழுப்புரம் பகுதியில் உள்ள நண்பர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த, விடியல் என்ற திட்டத்தை துவக்கி, கஞ்சா விற்பனையாளர்களை கண்டறிந்து கைது நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதன் மூலம் புதுச்சேரியில் குற்ற வழக்குகள் பதிவாகுவது சற்று குறைய துவங்கி உள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, தற்கொலை, கஞ்சா, சாலை விபத்துக்கள் என மொத்தம் 8,688 வழக்கு பதிவானது. போலீசாரின் விடியல் மற்றும் ஆப்ரேஷன் திரிசூல் மூலம் குற்ற சம்பங்கள் குறைய துவங்கியதால் கடந்த 2024ம் ஆண்டு புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாமில் பிராந்தியத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி என மொத்தம் 7,246 வழக்குகள் பதிவாகி உள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 1,442 வழக்கு குறைவு.
கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகளில், குற்ற வழக்குகளை விட முன்னெச்சரிக்கை நடவடிக்கை வழக்குகள் அதிகம் பதிவு செய்யப்பட்டதாகவும், கொலை வழக்கும் குறைந்துள்ளது என சீனியர் எஸ்.பி., கலைவாணன் தெரிவித்தார்.
டாப் 10 போலீஸ் நிலையங்கள்
புதுச்சேரியில் கடந்த ஆண்டு அதிக குற்ற வழக்குகள் பதிவான போலீஸ் நிலையங்கள் பட்டியலில் வில்லியனுார் போலீஸ் நிலையம் 397 வழக்கு பதிவு செய்து முதலிடத்தில் உள்ளது. அதன் தொடர்ச்சியாக தன்வந்திரி நகர் -282, முதலியார்பேட்டை -274, ரெட்டியார்பாளையம் -269, காரைக்கால் டவுன் -264, உருளையன்பேட்டை -263, பெரியகடை -249, ஒதியஞ்சாலை -247, லாஸ்பேட்டை -224, மேட்டுப்பாளையம் -215 வழக்கு பதிவு செய்துள்ளன.

