/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புத்தகங்களை வாசிக்காவிட்டால் கற்பனை திறன், படைப்பாற்றல் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு ஆச்சாரியா கல்வி நிறுவனங்களின் தலைவர் அரவிந்தன் 'அட்வைஸ்'
/
புத்தகங்களை வாசிக்காவிட்டால் கற்பனை திறன், படைப்பாற்றல் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு ஆச்சாரியா கல்வி நிறுவனங்களின் தலைவர் அரவிந்தன் 'அட்வைஸ்'
புத்தகங்களை வாசிக்காவிட்டால் கற்பனை திறன், படைப்பாற்றல் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு ஆச்சாரியா கல்வி நிறுவனங்களின் தலைவர் அரவிந்தன் 'அட்வைஸ்'
புத்தகங்களை வாசிக்காவிட்டால் கற்பனை திறன், படைப்பாற்றல் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு ஆச்சாரியா கல்வி நிறுவனங்களின் தலைவர் அரவிந்தன் 'அட்வைஸ்'
ADDED : ஆக 28, 2024 03:51 AM
புதுச்சேரி : புத்தகங்களை படிக்காவிட்டால், உங்களின் கற்பனை சிந்தனையும், படைப்பாற்றலும் அடிப்பட்டுவிடும் என ஆச்சாரியா கல்வி நிறுவனங்களின் தலைவர் அரவிந்தன் பேசினார்.
'தினமலர் பட்டம்' இதழ் வினாடி வினா நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
'தினமலர்-பட்டம்' இதழ் சமூகத்திற்கு தேவையான ஒன்று. நான் பள்ளி, கல்லுாரிகளில் பள்ளி புத்தகங்களை வாசித்தேன். அதில் உள்ள விஷயங்களை கற்றுக்கொள்வேன். அந்த கற்றலால் தான், எனது வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. அப்போதெல்லாம் நுாலகம் என்பது ஒரு பெரிய கடல். நுாலகத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து புத்தகத்தை எடுத்து வந்து நண்பர்களிடம் விவாதிப்போம்.
இப்போதெல்லாம் நுாலகம் மட்டுமல்ல, புத்தக கடைகளும் காணாமல் போய்விட்டது. புத்தகம் வாங்கி படிக்கும் பழக்கமும் குறைந்துவிட்டது. இப்போது புத்தகம் பி.டி.எப்., பைல்களாக, சாப்ட் பைல்களாக மாறிவிட்டது. நாமும் புத்தகத்தை தொட்டு படிப்பதில் இருந்து திசைமாறிவிட்டோம்.
பி.டி.எப்., பைல்களை ஐ.பேடு, லேப்டாப், கம்ப்யூட்டரில் போட்டு படத்தோம். தற்போது மொபைல் போனில் யூடியூப் உலகத்திற்குள் நுழைந்தாகி விட்டது. புத்தகத்தில் படித்த, கிடைத்த தகவல்களையும் நாம் யூடியூப்பில் காட்சி வடிவில் சேகரிக்கின்றோம். ஆனால் அந்த தகவல்கள் நம்மை வளர்க்கவில்லை. அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவில்லை என்பதே உண்மை.
புத்தகம் படிக்கும்போது நான்கு வரி படித்தாலும், அதை மூடி வைத்துவிட்டு யோசிப்பேன். அது எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வரிகள் என்ன சொல்ல வருகின்றது என்பதை புத்தகம் ஒரு கற்பனையை உருவாக்கி, ஆழ்மனதில் ஆழமாக பதியும். ஆனால் யூடியூப் பார்க்கும்போது அது என்ன சொல்ல வருகின்றதோ அதை உள்வாங்கினாலும், என்னை அது புத்தகம் போன்று சிந்திக்க வைப்பதில்லை.
அடுத்து யூடியூப்பில் இருந்து இன்ஸ்டாகிராமில் அதிவிரைவாக தகவல்களை பார்க்கின்றோம். ஒரே இடத்தில் 10 நிமிடத்தில் 30 புத்தகத்திற்கான தகவல்கள் கிடைக்கின்றன.
ஆனால், இந்த தகவல்கள் நம்மை வளர்ப்பதில்லை. தகவல் சேரும் குப்பை தொட்டியாக்கிவிட்டது. ஆக்கப்பூர்வாக தெளிவாக சிந்தனையை தரவில்லை. இதனால் இப்போது மீண்டும் நான் புத்தகம் பக்கம் வாசிக்க வந்துவிட்டேன். பி.டி.எப்., பைலாக இருந்தாலும் அவற்றை பிரிண்ட் போட்டு படிக்கின்றேன்.
நான் சிறுவனாக இருந்தபோது காமிக்ஸ் புத்தகங்களை படிப்பேன். இது உள்ளுக்குள் பெரிய கற்பனை வளத்தை ஏற்படுத்தியது. இந்த கற்பனை வளம் தலைமை பண்பினை வளர்க்கும்.
ஆனால், இன்றைக்கு காமிக்ஸ் புத்தகங்களை மாணவர்கள் படிப்பதே இல்லை. ஆனால் பல மணி நேரம் கார்ட்டூன் பார்க்கின்றனர். இதனால் பெரிய நிறுவனங்கள் சூப்பர் ஹீரோக்களை கார்ட்டூனாக எடுத்து குழந்தைகளை மகிழ்ச்சி படுத்துகின்றன.
இதனால் உங்களுடைய ஒரிஜனல் கற்பனையும், சிந்தனை, படைப்பாற்றல் அடிபட்டு போய்விடுகிறது. மற்றவர்களின் கற்பனை மற்றும் சிந்தனையைதான் நீங்கள் உள்வாங்கி எப்போதும் பார்த்துக் கொண்டு இருக்கின்றீர்கள்.
ஒரு வயது குழந்தை கூட இப்போது மொபைலில் கார்ட்டூனை தேடுகின்றது. இது இன்னும் ஆபத்தானது. நாங்கள் படிக்கும்போது வாரத்திற்கு ஞாயிறு மட்டும் கார்ட்டூன் போடுவார்கள். இப்போது கார்ட்டூனுக்குகென 30 சேனல்கள் உள்ளன. புத்தகங்களை வாசிக்காவிட்டால், சொந்த கற்பனை திறனும், படைப்பாற்றலும் அடிபட்டு போய்விடுகின்றது.
வினாடி வினாவில் உடனுக்கு பதில்களை சொல்ல வேண்டும். அப்போது தான் வெல்ல முடியும். ஆனால் நிறைய பேருக்கு இன்றைக்கு அது வரவில்லை. நீட், ஐ.ஐ.டி., தேர்வுகளில் இதை பார்க்க முடிகிறது.
விடைகள் தெரிந்திருந்தாலும் கூட உடனடியாக பதில் அளிப்பதில்லை. தேர்வு அறையை விட்டு வெளியே வந்த பிறகு தான் பதில் வரும். இதற்கு காரணம் வினாடி வினா போன்று மூளைக்கு உடனுக்குடன் பதில் அளிக்கும் வேலையை தருவதில்லை. இதன் காரணமாகவே தேர்வு அறைக்கு சென்றதுமே அனைத்தும் மறந்து விடுகின்றது. உடனுக்குடன் பதில் அளிக்கும் திறமையை வினாடி வினா தான் தரும்.
வினாடி வினா பங்கேற்பதன் மூலம் இந்த கேள்விக்கு என்ன விடை என்ற தேடுதல் துவங்கும். இந்த பழக்கம் வந்தாலே போதும், எந்த தேர்வாக இருந்தாலும் அடுத்த கனமே உடனடியாக பதில் அளிக்கும் பழக்கம் உங்களுக்கும் வந்துவிடும்.
இவ்வாறு அவர் பேசினார்.

