/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லிங்காரெட்டிப்பாளையத்தில் ரூ.5.5 லட்சம் பறிமுதல்
/
லிங்காரெட்டிப்பாளையத்தில் ரூ.5.5 லட்சம் பறிமுதல்
ADDED : ஏப் 05, 2024 05:29 AM

திருக்கனுார்: லிங்காரெட்டிப்பாளையத்தில் உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி, லோக்சபா தேர்தலை முன்னிட்டு தேர்தல் துறையினர் மற்றும் போலீசார் மாநில எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை 10:30 மணியளவில் திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமையில் காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அவ்வழியாக வந்த ஸ்கார்பியோ காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் ரொக்க பணம் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் காரை ஓட்டி வந்த புதுச்சேரி உருவையாறு, பாகூர் மெயின் ரோட்டை சேர்ந்த ஹரி சீதாராமன், 39 என்பவரிடம் பணம் குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மயிலம் பகுதியில் ரியல் எஸ்டேட் பத்திரப் பதிவுக்காக பணத்தை கொண்டு செல்வதாக தெரிவித்தார்.
ஆனால், பணத்திற்கான உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த காட்டேரிக்குப்பம் போலீசார், தேர்தல் துறையின் பறக்கும் படை அலுவலர் பிரபாகரனிடம் ஒப்படைத்தனர்.

