/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மதில் சுவர் இடிந்து 5 தொழிலாளர்கள் பலி
/
மதில் சுவர் இடிந்து 5 தொழிலாளர்கள் பலி
ADDED : ஏப் 01, 2024 04:56 AM

புதுச்சேரி : புதுச்சேரியில், கழிவுநீர் வாய்க்கால் துார்வாரும் பணியின் போது, அருகில் உள்ள மின்துறை வளாக மதில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில், 5 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்; காயமடைந்த 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரி, நைனார்மண்டபம் கிழக்கு வாசல் நகரில் இருந்து வசந்தம் நகர் வழியாக செல்லும் 'ப' வடிவ கழிவுநீர் வாய்க்கால், தேங்காய்திட்டு பெரிய வாய்க்காலில் கலக்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த வாய்க்காலை துார் வாரும் பணி, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வருகிறது.
வேல்ராம்பட்டு, திருமால் நகரை சேர்ந்த ஒப்பந்ததாரர் மோகன் இப்பணியை செய்து வருகிறார். வாய்க்கால் துார்வாரும் பணிக்காக, அரியலுார், திருவாரூர் பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் 20க்கும் மேற்பட்டோரை வரவழைத்து, வசந்தம் நகரில் தற்காலிக ஷெட் அமைத்து தங்க வைத்திருந்தனர். நேற்று காலை 6:00 மணிக்கு 16 தொழிலாளர்கள், வசந்தம் நகர், 3வது குறுக்கு தெரு பகுதியில், குடியிருப்புக்கும், மரப்பாலம் துணை மின் நிலைய வளாக மதில் சுவருக்கும் நடுவில் செல்லும் 10 அடி அகல கழிவுநீர் வாய்க்காலில் துார் வாரும் பணியை மேற்கொண்டனர். வாய்க்காலில் துார் வாரும் கழிவுகளை மதில் சுவரின் மறுக்கம், துணை மின் நிலைய வளாகத்திற்குள் கொட்டி வந்தனர்.
காலை 8:30 மணிக்கு, துார் வாரும் பணியில் இருந்த 7 பேர் உணவு சாப்பிட சென்ற நிலையில், 9 தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். அப்போது, வாய்க்காலை ஒட்டியுள்ள துணை மின் நிலைய வளாக மதில் சுவரில் 40 அடி நீள சுவர், திடீரென இடிந்து வாய்க்கால் பக்கமாக விழுந்தது.
இதில் மதில்சுவர் மீது அமர்ந்து வேலை செய்தவர்களும், வாய்க்காலில் நின்று வேலை செய்தவர்களும் இடிபாடுகளுக்குள் சிக்கினர். அவர்களின் மரண ஓலம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை ஒவ்வொருவராக மீட்டனர்.
தீயணைப்பு துறை மற்றும் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் வர 45 நிமிடத்திற்கு மேல் தாமதம் ஏற்பட்டதால், மீட்கப்பட்ட 8 பேரை அங்கிருந்த டாடா ஏஸ் வாகனத்தில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், இடிபாடுகளை அகற்றி மீட்பு பணியில் ஈடுபட்டனர். அரை மணி நேரம் போராடி, அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம், இரவான்குடி, மாதா கோவில் தெரு பாக்கியராஜ்,38; என்பவரை சடலமாக மீட்டனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், ஸ்ரீமுஷ்ணம், தேத்தாம்பட்டு, பாலமுருகன்,38; அரியலுார் நெட்டலகுறிச்சி அந்தோணிசாமி, 65; ஆகிய இருவர் உயிரிழந்தனர்.
மருத்துவமனையில், அரியலுார் இரவான்குடி, கமலஹாசன், 53; தத்தனுார் ராஜேஷ்கண்ணா, 50, ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி மதியம் உயிரிழந்தனர்.
பலத்த காயங்களுடன் இரவான்குடி குணசேகரன், 52; நெட்டலகுறிச்சி சீனிவாசன், 50; நகரப்பாடி பாலமுருகன், 52; சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறு காயமடைந்த நெட்டலகுறிச்சி ஜெய்சங்கர் சிகிச்சை பெற்று திரும்பினார்.
விபத்து நடந்த இடத்தை சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா, எஸ்.பி., பக்தவச்சலம் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். எம்.எல்.ஏ.,க்கள் சம்பத், பாஸ்கர், அசோக்பாபு, முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
பாதுகாப்பு உபகரணம் இன்றி தொழிலாளர்களை வேலையில் ஈடுபடுத்தியதாக, ஒப்பந்தாரர் மோகன் மீது முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

