அதிகாரிகளுக்கு நெருக்கடி என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எங்கே?: தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் கேள்வி
அதிகாரிகளுக்கு நெருக்கடி என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எங்கே?: தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் கேள்வி
ADDED : ஜூன் 03, 2024 11:30 PM

''தேர்தல் அதிகாரிகளுக்கு நெருக்கடி தரப்படுவதாக கூறுவோர், அதற்கான ஆதாரங்களை கொடுக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் மீது தேவையற்ற சந்தேகத்தையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்தக்கூடாது,'' என, தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் கூறினார்.
நாடு முழுதும் இன்று லோக்சபா தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், நேற்று நிருபர்களிடம் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் கூறியதாவது:
நடந்து முடிந்துள்ள லோக்சபா தேர்தல், வன்முறையே இல்லாத தேர்தலாக அமைந்துள்ளது. ஜம்மு -- காஷ்மீரில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச ஓட்டுப்பதிவுடன் அமைதியாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
மணிப்பூரில் பெரிய அளவில் கலவரம் ஏதுமின்றி இந்த தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. நக்சல்கள் ஆதிக்கம் அதிகமிருக்கும் பகுதிகளிலும் பாதிப்புகள் ஏதுமின்றி ஓட்டுப்பதிவு நடந்தது.
விதிமுறை மீறல்
தேர்தல் பிரசாரத்தின்போது நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதற்காக அமைச்சர்கள், முக்கிய கட்சித் தலைவர்கள் என பலருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
நடத்தை விதிமுறைகளின்படி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும்படி அவர்களிடம் வேண்டுகோள் வைத்தோம். விதிமுறை மீறல்கள் தொடர்பாக, தேர்தல் ஆணையத்துக்கு 4.5 லட்சம் புகார்கள் வந்து சேர்ந்தன. அவற்றில், 99.9 சதவீதம் வரையிலான புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு விரோதமாக, பல்வேறு இடங்களில் கணக்கில் வராத வகையில் இருந்த 10,000 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வன்முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2019 பொதுத் தேர்தலில், 540 இடங்களில் மறுஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. ஆனால் இம்முறையோ, 39 இடங்களில் மட்டுமே மறுஓட்டுப்பதிவு நடைபெற்றது.
இந்த தேர்தலில், 62.4 கோடி பேர் தங்களது ஜனநாயக கடமையை மேற்கொண்டு, ஓட்டு போட்டுள்ளனர். இது, 'ஜி - 7' நாடுகளோடு ஒப்பிடுகையில், ஒன்றரை மடங்கு அதிகம். 27 நாடுகளை கொண்ட ஐரோப்பிய யூனியனை காட்டிலும் இரண்டரை மடங்கு அதிகம். எனவே, இதை ஒரு அதிசயம் என்றே கூற வேண்டும். இதற்கு இணையாக உலகின் வேறெந்த நாட்டையும் கூற முடியாது. அந்த வகையில், இந்த தேர்தல் ஒரு உலக சாதனை.
தேர்தல் கமிஷனை காணவில்லை என்று கிண்டல் செய்து சமூக ஊடகங்களில் மீம்ஸ்கள் வெளியானதை நாங்களும் கண்டோம். தேர்தல் ஆணையம் எங்கும் போகவில்லை. நாங்கள் அனைவரும் இங்கு தான் இருக்கிறோம்.
கலெக்டர்கள் மீது புகார்
ஓட்டு எண்ணிக்கை குறித்த செயல் முறை முற்றிலும் வலுவானதாக இருக்கும். அது மட்டுமல்லாது, இந்த செயல்முறை, ஒரு கடிகாரம் துல்லியமாக நேரம் காட்டுவதைப் போல மிக மிக துல்லியமானதாகவும் அமையும்.
ஒரு வேட்பாளர், தன் வேட்புமனுவை கடைசி நேரத்தில் வாபஸ் பெற்றால், அதற்கு தேர்தல் ஆணையம் என்ன செய்துவிட முடியும். அவர்களின் உரிமை சார்ந்த விஷயம் அது.
எனவே, தேர்தல் ஆணையத்தின் மீது தேவையற்ற சந்தேகத்தையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்த வேண்டுமென்பதற்காகவே சிலர் திட்டமிட்டு செயல்படுகின்றனர். சில நெருக்கடிகளுக்கு பணிந்து, ஒருதலைபட்சமாக செயல்படுவதாக தேர்தல் ஆணையம், அதிகாரிகள், கலெக்டர்கள் மீது புகார் சொல்கின்றனர்.
அவ்வாறு இருந்தால், அதற்கான ஆதாரங்களை அவர்கள் தர வேண்டும். ஓட்டுப்பதிவு குறித்த விபரங்களை அடிப்படையாக வைத்து, தேர்தல் ஆணையம் மீது சந்தேகத்தை கிளப்புவதை ஏற்க முடியாது.
ஜம்மு - காஷ்மீரில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில், 58.8 சதவீத ஓட்டுகள் தற்போது பதிவாகியுள்ளன; மகிழ்ச்சி அளிக்கிறது. அங்கு, விரைவில் சட்டசபை தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் துவங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கைதட்டி நன்றி
பொதுவாக ஓட்டு எண்ணிக்கைக்கு முதல் நாளில், தேர்தல் ஆணையர்கள் சார்பில் நிருபர்கள் சந்திப்பு நடத்தப்பட்டது இல்லை. ஆனால், நாட்டின் தேர்தல் வரலாற்றிலேயே முதன்முறையாக, ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாள், நிருபர்களை தேர்தல் ஆணையர்கள் நேற்று சந்தித்தனர்.
அப்போது, ஓட்டு போட்ட வாக்காளர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள், அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் என அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக, தேர்தல் ஆணையர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
குறிப்பாக அதிகள வில் பங்கேற்று ஓட்டளித்ததற்காக பெண்களுக்கும் நன்றி தெரிவிக்கப் பட்டது.
- நமது டில்லி நிருபர் -

