'இண்டிகோ' விமான நிறுவன பிரச்னையால் மத்திய அமைச்சர் ராம் மோகனுக்கு சிக்கல்
'இண்டிகோ' விமான நிறுவன பிரச்னையால் மத்திய அமைச்சர் ராம் மோகனுக்கு சிக்கல்
ADDED : டிச 10, 2025 05:36 AM

'இண்டிகோ' விமான நிறுவன நெருக்கடியை தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கையாண்ட விதம், பிரதமர் நரேந்திர மோடியை அதிருப்தி அடையச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ., தனிப்பெரும்பான்மை பெறவில்லை.
பயணியர் பாதிப்பு
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆதரவுடன், மத்தியில் பா.ஜ., ஆட்சி நடத்தி வருகிறது. இரு கட்சிகளின் ஆதரவும் இன்றியமையாதது என்பதால், மத்திய அமைச்சரவையில் முக்கிய இலாகாக்கள் வழங்கப்பட்டன.
அந்த வகையில், தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த லோக்சபா எம்.பி., ராம் மோகன் நாயுடு, 47, விமான போக்குவரத்து அமைச்சர் ஆனார் .அமைச்சராக பதவியேற்றதும் துடிப்புடன் செயல்பட்ட அவர், தனியார் விமான நிறுவனமான இண்டிகோவின் பிரச்னையை கையாண்ட விதம் பேசு பொருளாகி உள்ளது.
நாட்டில் அதிக விமான சேவைகளை வழங்கி வரும் இண்டிகோ நிறுவனத்தின் சேவைகள், கடந்த ஒரு வாரமாக முடங்கியதில் ஆயிரக்கணக்கான பயணியர் பாதிக்கப்பட்டனர். விமான சேவை பாதிப்புக்கு என்ன காரணம் என, ஊடகங்களிடம் தெரிவிக்க வேண்டிய அமைச்சர் ராம் மோகன் நாயுடு, முதல் மூன்று நாட்கள் கண்ணில் படவே இல் லை.
விமான நிலையங்களில் பயணியர் அவதிப்படும் சூழலை தேசிய ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டிய பின்னரே, அவர் வெளியே வந்தார். ரஷ்ய அதிபர் புடின் நம் நாட்டுக்கு வந்திருந்த நேரத்தில், இண்டிகோ சேவை பாதிக்கப்பட்டது, பிரதமர் மோடியை கடும் அதிருப்தி அடையச் செய்துள்ளது.
இந்த நெருக்கடியை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கையாண்ட விதமும் அவருக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. ரஷ்யாவுக்கு புடின் புறப்பட்டதும், இந்த பிரச்னையை பிரதமர் அலுவலக அதிகாரிகள் நேரடியாகவே கையாண்டனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் இந்த விவகாரத்தில் அமைச்சர் ராம் மோகன் நாயுடு மீது கோபத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
'வார் ரூம்'
நிலைமை இப்படி இருக்க, இந்த விவகாரத்திலும் தெலுங்கு தேசம் நிர்வாகிகள் அரசியல் ஆதாயம் தேட முயன்றனர். அக்கட்சி செய்தித் தொடர்பாளர் தீபக் ரெட்டி, ''இண்டிகோ பிரச்னையை ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷின், 'வார் ரூம்' அமைத்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறார்,'' என்றார்.
விமான போக்குவரத்து அமைச்சராக ராம் மோகன் நாயுடு உள்ள நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷின் கவனத்தை ஈர்க்க, தீபக் ரெட்டி இப்படி பேசியதை, எதிர்க்கட்சியான ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து வருகிறது.
- நமது சிறப்பு நிருபர் -

