ADDED : அக் 08, 2024 05:09 AM

மும்பை: இந்தியாவில் கிட்டத்தட்ட 16,500 கோடி ரூபாய் துவக்க முதலீட்டில், உணவு பதப்படுத்துதல் பூங்காவை அமைப்பதற்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முன்வந்திருப்பதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடந்த இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான 12வது முதலீடு தொடர்பான கூட்டத்துக்குப் பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இந்தியாவில், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்குள் உணவுப் பூங்கா அமைப்பதற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது. துவக்க முதலீடாக, கிட்டத்தட்ட 16,500 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ள இந்த பூங்காவில், இந்திய விவசாயிகளின் உயர்தரம் மிக்க விளைபொருட்களை பயன்படுத்தி, உணவு ரகங்கள் தயாரிக்கப்படும். அவற்றை, ஐக்கிய அரபு எமிரேட்சில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பூங்காவை அமைப்பது தொடர்பாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்திய அரசு மற்றும் தொடர்புடைய மாநில அரசுகள் இணைந்து ஒரு குழுவை ஏற்படுத்த ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் தகவல் தொகுப்பு மையங்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மையங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்தும் விரிவான பேச்சு நடத்தப்பட்டது.
இந்தியாவின் அன்னிய முதலீடு மையத்தை, முதலாவது வெளிநாடாக, ஐக்கிய அரபு எமிரேட்சில் அமைக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார்.
