தடபுடல் விருந்துடன் ஈ.சி.ஆரில் த.வெ.க., முதல் பொதுக்குழு?
தடபுடல் விருந்துடன் ஈ.சி.ஆரில் த.வெ.க., முதல் பொதுக்குழு?
ADDED : பிப் 18, 2025 06:54 AM

சென்னை; தமிழக வெற்றிக் கழக பொதுக்குழு கூட்டத்தை, கிழக்கு கடற்கரை சாலையில் பிரமாண்டமாக நடத்த, அக்கட்சி தலைவர் விஜய் முடிவு செய்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, கட்சியை விஜய் தயார்படுத்தி வருகிறார். கட்சிக்கு 120 மாவட்டச் செயலர்களை நியமிக்க திட்டமிடப்பட்டு, இதுவரை 95 பேரை நியமனம் செய்துள்ளார். தேர்தலுக்கான ஆலோசகராக பீஹார் மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கட்சியின் முதல் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த, விஜய் முடிவு செய்துள்ளார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், பூஞ்சேரியில் உள்ள தனியார் விடுதியை, இதற்காக தேர்வு செய்துள்ளனர். அங்கு, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட 3,000 பேருக்கு தடபுடல் விருந்துடன், பொதுக்குழு கூட்டம் இம்மாத இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
அ.தி.மு.க., தலைமை நடத்தும் பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகளை மிஞ்சும் வகையில், உணவு உள்ளிட்ட ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என, கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார்.

