இது தானா சேர்ந்த கூட்டம்: திருச்சி பிரசாரத்தில் விஜய் பெருமிதம்
இது தானா சேர்ந்த கூட்டம்: திருச்சி பிரசாரத்தில் விஜய் பெருமிதம்
ADDED : செப் 14, 2025 04:58 AM

திருச்சி: திருச்சியில், 'மக்கள் சந்தி ப்பு' பிரசார பயணத்தை துவக்கிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ''இங்கே கூடியிருக்கும் கூட்டம், தானா சேர்ந்த கூட்டம்; அன்புக்கும், பாசத்துக்கும் மட்டுமே அடிமையாக இருக்கும் கூட்டம்,'' என்று பேசினார்.
திருச்சி மரக்கடை பகுதியில் நேற்று அவர் பேசியதாவது:
அந்த காலத்துல போருக்கு போறதுக்கு முன்னாடி, போர்ல ஜெயிக்குறதுக்காக, குல தெய்வ கோவிலில் சுவாமியை கும்பிட்டு விட்டுத்தான் போவாங்க.
'நோ காம்ப்ரமைஸ்!' அந்த மாதிரி, தேர்தலுக்கு போறதுக்கு முன்னாடி, மக்களை பார்த்துட்டு போகலாம்னு வந்திருக்கேன். ஒரு சில மண்ணை தொட்டா ரொம்ப நல்லதுன்னு சொல்வாங்க.
அந்த அடிப்படையில தான், திருச்சியில இருந்து பிரசாரத்தை துவங்கி இருக்கிறேன். முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, 1956ல் தேர்தல்ல நிக்கணும்னு முடிவெடுத்தது, திருச்சி மாநகரில் தான்.
அதேபோல, இன்னொரு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 1974ல் அ.தி.மு.க.,வை துவங்கி, முதன் முதலில் மாநாடு நடத்தினது திருச்சியில தான். இது மாதிரி, திருச்சியை மையமா வெச்சு ஏகப்பட்ட சம்பவங்களையும், உதாரணங்களையும் சொல்லலாம்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலுக்காக, தி.மு.க., தரப்பில் 505 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தீங்க சி.எம்., சார். ஆனால், பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேத்தலை சார். இதை சொன்னாலும், உங்களிடம் இருந்து பதில் வராது சி.எம்., சார்.
தி.மு.க.,-வைச் சேர்ந்தவருக்கு சொந்தமான மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடைபெற்றுள்ளது. பஸ்களில் பெண்களை இலவசமாக பயணம் செய்ய அனுமதித்து விட்டு, 'ஓசி ஓசி' என்று கேவலமாக சொல்லிக் காட்டுகின்றனர். அனைத்து மகளிருக்கும் 1,000 ரூபாய் தரவில்லை; ஆனால், சிலருக்கு கொடுத்ததை சொல்லிக் காட்டுகின்றனர்.
கல்வி, மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளை, த.வெ.க., ஆட்சிக்கு வந்தால் செய்து கொடுப்போம். பெண்கள் பாதுகாப்பிலும், சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளிலும் 'நோ காம்ப்ரமைஸ்!'
'மணல் மாபியா' கூட்டம் தமிழகம் முழுக்க இருக்கிறது. அதில், பெரும் பங்கு தி.மு.க.,வினருக்கு இருக்கிறது. துறையூரைச் சேர்ந்த தி.மு.க., நிர்வாகி, செம்மண் விவகாரத்தில் கைதானதே இதற்கு ஆதாரம் .
இந்த மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருக்கின்றனர்; இருந்தும், என்ன பிரயோஜனம். மாவட்டத்துக்காக ஒரு நல்லதையும் செய்யவில்லை; வரும் தேர்தலிலும் இவர்களுக்குத்தான் ஓட்டு போடுவீர்களா?
சம்மட்டி அடி தேர்தலில், மக்கள் நல்ல தீர்ப்பு அளிக்க மாட்டார்கள் என்ற நினைப்பில் இருக்கும் தி.மு.க.,வுக்கு, ஓட்டு வாயிலாக சம்மட்டி அடி கொடுக்க வேண்டும்.
முடியாததையெல்லாம் தேர்தல் வாக்குறுதியாக த.வெ.க., தராது. எதெல்லாம் சாத்தியமோ, அதை மட்டுமே கொடுப்போம். இங்கே கூடியிருக்கும் கூட்டம், தானா சேர்ந்த கூட்டம்; அன்புக்கும், பாசத்துக்கும் மட்டுமே அடிமையாக இருக்கும் கூட்டம். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து அரியலுார் சென்ற நடிகர் விஜய், அங்குள்ள பஸ் நிலையம் அருகில் திரண்டிருந்த கட்சியினர் மத்தியில் பேசினார். அங்கு அவர் பேசியதாவது:
மக்களின் அன்புக்காக மட்டுமே பெரிய வருமானத்தையும், வசதியையும் துாக்கி எறிந்துவிட்டு, அரசியலுக்கு வந்திருக்கிறேன். உங்கள் பாசம் தான் எனக்கு பெரிது. வேணுங்கற அளவுக்கு பணத்தைப் பார்த்தவன் இந்த விஜய்.
த.வெ.க.,வுக்கு கூடும் கூட்டத்தைப் பார்த்து, எதிரிகள் பயந்து போயிருக்கின்றனர். பா.ஜ., நம்மை ரொம்ப கஷ்டப்படுத்துகிறது. பீஹாரில், 65 லட்சம் ஓட்டுகளை காணோம். ஓட்டு திருட்டு என்ற மோசமான செயலில் ஈடுபடுகின்றனர்.
ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டம், தில்லுமுல்லு திட்டம்; ஜனநாயக படுகொலை. அது மட்டுமல்ல, தொகுதி மறுசீரமைப்பும் தென் மாநிலங்களை பெரிய அளவில் பாதிக்கும். பா.ஜ., துரோகம் செய்கிறது என்றால், தி.மு.க., நம்ப வைத்து கழுத்தறுக்கிறது.
பா.ஜ.,வும், தி.மு.க.,வும் மறைமுக உறவுக்காரர்கள். தி.மு.க., போல் மக்களை ஏமாற்றும் வேலையை நாங்கள் செய்யப் போவதில்லை. தீர்வை நோக்கி போவதும், தீர்வு காண்பதும் மட்டும் தான் த.வெ.க.,வின் லட்சியம். இவ்வாறு அவர் பேசினார்.
விஜய்க்கு வந்த கூட்டம் ஓட்டாக மாறுமா? திருச்சியில் விஜய்க்கு பெரிய அளவில் கூட்டம் கூடியதாக சொல்கின்றனர். கூட்டம் கூடலாம்; ஆனால், அதெல்லாம் ஓட்டாக மாற வேண்டுமே. கூடும் கூட்டம் விஜய் ஒரு நடிகர் என்பதால், அவரை பார்க்க வரும் கூட்டமாகக் கூட இருக்கலாம். விஜயை பார்க்க சென்ற ஒவ்வொரு தம்பி வீட்டிலும் உள்ள குடும்பத்தினர் மற்றும் அந்த தம்பிகளின் உறவினர்கள் வீடுகளில் இருப்போரும், தி.மு.க., அரசின் திட்டங்களால் பயன் பெற்றிருப்பர். அதனால், ஓட்டுச்சாவடிக்கு செல்லும் முன், அவர்கள் பயன் பெற்றதையெல்லாம் நினைத் துப் பார்ப்பர். மற்றபடி, யாருக்கும் எவ்வித பாரபட்சமும் இன்றி, எங்களது வேலை ெதாடர்கிறது. - மகேஷ், தமிழக அமைச்சர், தி.மு.க.,
'மைக்' வேலை செய்யவில்லை கண்டுகொள்ளாத கட்சியினர் திருச்சி விமான நிலையத்தில் இருந்து விஜய் புறப்பட்ட பிரத்யேக வாகனம், முண்டியடித்த மக்கள் கூட்டத்திற்குள் மரக்கடை வரை ஊர்ந்து வந்தது. இதனால், 15 கிலோ மீட்டர் துாரத்தை, விஜய் வாகனம் கடக்க ஐந்தரை மணி நேரம் ஆனது. காலை 9:30 மணிக்கு பயணத்தை துவங்கிய விஜய், போலீசார் அனுமதிக்காத போதிலும், ரோடு ஷோ நடத்தியது போல் மிக மிக மெதுவாக கூட்டத்தை கடந்து, மாலை 3:00 மணிக்கு மரக்கடை பகுதியை வந்தடைந்தார். மரக்கடை ஏரியாவில் மக்கள் மத்தியில் விஜய் பேசும்போது, ஒலிபெருக்கியின் மைக் வேலை செய்யவில்லை. இதனால், விஜய் பேசுவது எதுவுமே கூட்டத்தினருக்கு கேட்கவில்லை. ஆனால், இதை கடைசி வரை கட்சித் தலைவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. நீண்ட தாளில் எழுதி எடுத்து வரப்பட்டதை, சினிமா வசனம் போல் பேசி முடித்த நடிகர் விஜய், பேச்சை முடித்ததுமே பிரசார வாகனத்திற்குள் சென்று அமர்ந்து கொண்டார்.