UPDATED : பிப் 20, 2024 08:12 AM
ADDED : பிப் 20, 2024 06:09 AM

தமிழக பட்ஜெட்டில், கோவை மெட்ரோ திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல், மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியதாகக் கூறியிருப்பது, இத்திட்டத்தைக் கைகழுவ தமிழக அரசு முடிவு செய்துள்ளதோ, என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.
மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த, கடந்த 2011ல் மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்ட 19 இரண்டாம் நிலை நகரங்களின் பட்டியலில், தமிழகத்தில் கோவை மட்டுமே இடம் பெற்றிருந்தது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, 12 ஆண்டுகளுக்குப் பின், கடந்த ஆண்டு ஜூலையில் தான் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
முதல் கட்டமாக, அவிநாசி ரோடு மற்றும் சத்தி ரோட்டில் 39 கி.மீ., துாரத்துக்கு, 32 ஸ்டேஷன்களுடன் இது அமையுமென்று, அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
மொத்தம் ரூ.9,700 கோடி மதிப்பில், இத்திட்டம் ஐந்தாண்டுகளுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று, சென்னை மெட்ரோ திட்டத்தின் மேலாண்மை இயக்குனர் சித்திக் தெரிவித்தார்.
இத்திட்டத்துக்கான திட்ட அறிக்கையைத் தயார் செய்வதற்கு நிதி வழங்கிய ஜெர்மனியின் கே.எப்.டபிள்யு., என்ற பன்னாட்டு வங்கி, நிதி வழங்குமென்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தரைதளத்தில் இல்லாமல், கோவையில் உயர் மட்டப்பாதையிலும், மதுரையில் பூமிக்கடியில் சுரங்கப்பாதையிலும் இத்திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிருந்ததால், அதற்கு நிதி வழங்க இயலாது என்று, அந்த வங்கி கைவிரித்துவிட்டது.
இதனால் இத்திட்டத்துக்கு வேறு பன்னாட்டு வங்கிகளில் நிதி பெறுவதற்கான முயற்சிகளில் இருப்பதாக, மெட்ரோ திட்ட அதிகாரிகள் தெரிவித்து வந்தனர்.
இதனால் தமிழக பட்ஜெட்டில் ஒரு பகுதி நிதியாவது ஒதுக்கப்பட்டு, முதற்கட்டப் பணிகள் துவங்குமென்று, எல்லோரும் எதிர்பார்த்து வந்தனர்.
ஏமாற்றமே மிஞ்சியது
ஆனால் நேற்று தாக்கலான தமிழக பட்ஜெட்டில் கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு, எந்த நிதி ஒதுக்கீடும் இல்லை. அவினாசி ரோடு மற்றும் சத்தி ரோட்டில் ரூ.10 ஆயிரத்து 740 கோடி மதிப்பில் கோவை மெட்ரோ திட்டம், ரூ.11 ஆயிரத்து 368 கோடி மதிப்பில் மதுரை மெட்ரோ திட்டம் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியதாகக் கூறப்பட்டுள்ளது.
பங்கு பகிர்வு அடிப்படையில் மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்த பின், இதற்கான பணிகள் துவங்குமென்று கூறி, இப்போதைக்கு தமிழக அரசு தப்பித்துள்ளது.
ஏற்கனவே, கோவை விமான நிலைய விரிவாக்கத்தில், அசாத்தியமான கால தாமதம் ஏற்பட்டு, ஒட்டு மொத்த கொங்கு மண்டலத்தின் தொழில் வளர்ச்சியே தேக்கமடைந்துள்ளது.
இந்த மெட்ரோ திட்டத்துக்கும் ஒப்புதலும், நிதியும் எப்போது கிடைக்குமென்பது தெரியவில்லை.
கோவையில் பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் ஐ.டி., பார்க் அமைக்க ரூ.1,100 கோடி ஒதுக்கியுள்ள தமிழக அரசு, நகரிலுள்ள கடுமையான போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் மக்கள் போக்குவரத்துத் திட்டத்திற்கு ஒரு ரூபாய் நிதியைக் கூட ஒதுக்க மறுத்துள்ளது.
இது, கடும் அதிருப்தியுடன் கோவை மெட்ரோ திட்டத்தை, தமிழக அரசு கைகழுவி விட்டதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-நமது சிறப்பு நிருபர்-

