தி.மு.க., ஆட்சிக்கு எதிரான மனநிலை இல்லை: அண்ணாமலை
தி.மு.க., ஆட்சிக்கு எதிரான மனநிலை இல்லை: அண்ணாமலை
ADDED : செப் 09, 2025 04:18 AM

கோவை : ''தற்போதைய நிலையில், தி.மு.க., கூட்டணி வலுவாகவே உள்ளது. ஆட்சிக்கு எதிரான மனநிலை நிலவவில்லை,” என, பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அண்ணாமலை பேசியதாவது:
அரசியலில் ஒரே இரவில் மாற்றத்தை நிகழ்த்த முடியாது. காவல்துறையில் இருந்து விலகி மனப்பூர்வமாகவே, பா.ஜ.,வில் இணைந்தேன். 2026ல் தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே பா.ஜ., இலக்கு. அதற்கு அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பதே நடைமுறை சாத்தியம் என்பதால், அதற்கான உத்தி வகுக்கப்பட்டது.
பா.ஜ., தனித்துப் போட்டியிட வேண்டும் என்பது, என் நிலைப்பாடு. அவ்வாறு போட்டியிட்டால், 2026ல் ஆட்சியைக் கைப்பற்றும் வலிமை பா.ஜ.,வுக்கு இல்லை. அதனாலேயே, கூட்டணி சேர்ந்தோம். கட்சிக்கு எது நல்லதோ, அதை செய்ய வேண்டும். அப்படித்தான் தலைமை மாற்றம் நிகழ்ந்தது.
அ.தி.மு.க.,வில் அனுபவம் வாய்ந்த மிக மூத்த தலைவர்கள் உள்ளனர். உட்கட்சி விவகாரங்களில் என்ன செய்ய வேண்டும் என்பது, அவர்களுக்கு தெரியும்.
எனக்கும் அ.தி.மு.க.,வுக்கும் உரசல் இருந்தது. நான் என்னவெல்லாம் செய்தேனோ, அவை அனைத்தும் பா.ஜ., வளர்ச்சிக்காகவே. என் கட்சிக்காக பேசினேனே தவிர, மற்றவர்களை அவமதிக்கும் நோக்கமில்லை. அவர்களும் விமர்சித்தனர்; நானும் விமர்சித்தேன்.
ஊழல் பற்றிப் பேசும்போது, என்னென்ன நடந்தது எனக் கூறித்தான் ஆக வேண்டும். அப்போதும் கூட, ஜெ., பெயரை குறிப்பிட்டதில்லை.
தமிழகத்தை பொறுத்த வரை, விஜய் ஒரு பிரதான போட்டியாளர். இளம் தலைமுறை வாக்காளர்களை கவர்ந்திருக்கிறார். 40 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள், 2.28 கோடி பேர் உள்ளனர்.
தமிழகத்தில் புதிதாக அரசியலுக்கு வருபவர்களுக்கு, 8 முதல் 12 சதவீதம் வரை ஓட்டு கிடைக்கும். விஜய்க்கு அப்படி கிடைக்குமா என தெரியாது.
அ.தி.மு.க., கூட்டணிக்கு விஜய் வருவார் என எதிர்பார்க்க முடியாது. தி.மு.க., - அ.தி.மு.க., என இரு கூட்டணிகளுக்கும் வெ ளியே, 20 முதல் 25 சதவீத ஓட்டுகள் உள்ளன.
இன்றைய சூழலில், திடமான கூட்டணியுடன் தி.மு.க., மிகவும் வலிமையாக உள்ளது. 40 சதவீதத்துக்கும் மேல் ஓட்டு சதவீதம் உள்ளது. ஆட்சிக்கு எதிரான மனநிலை பெரிதாக இல்லை. இப்போதுதான் உருவாகி வருகிறது. இவ்வாறு, அண்ணாமலை பேசினார்.