விடிஞ்சா போர்...? முடிஞ்சா பார்! பாகிஸ்தானுக்கு துாக்கமில்லா இரவு
விடிஞ்சா போர்...? முடிஞ்சா பார்! பாகிஸ்தானுக்கு துாக்கமில்லா இரவு
ADDED : மே 01, 2025 06:37 AM

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப்பின், பாகிஸ்தானுக்கு நித்தமும் துாக்கமில்லா இரவு தான். ஒவ்வொரு நாளும், பாகிஸ்தானுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி, அதன் முகத்திரை கிழித்து வருகிறது இந்தியா.
எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கையில் பாக்., ராணுவத்தின் நேரடி ஈடுபாடு, பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து அனுப்பியது, என பாகிஸ்தானின் பங்களிப்பு வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
நேற்று முன்தினம் பிரதமர் மோடி, ராணுவ தளபதிகளுடன் நடத்திய ஆலோசனைக்கு பின், பாகிஸ்தான் கதி கலங்கிப்போய் உள்ளது. போருக்கான செயல் திட்டம், நேரம், இலக்கு என அனைத்தையும் தீர்மானிக்க ராணுவத்துக்கு முழு அதிகாரம் அளித்து பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
இந்த செய்தி கேட்டதும், பாக்., பிரதமர், ராணுவம் மற்றும் அமைச்சர்கள் என அனைத்து தரப்பினரும் ஏதோ ஆபத்து வரப்போகிறது என உணர்ந்து விட்டனர். பொழுது விடிவதற்குள் போர் வந்து விடும் பயந்து போன பாக்., தகவல் ஒளிபரப்பு அமைச்சர் அட்டாவுல்லா தரார் நள்ளிரவு 2.00 மணிக்கு, 'எக்ஸ்' தளத்தில் கதறத் துவங்கிவிட்டார்.
ஐ.நா.,வுக்கு அழுத்தம்
''இந்தியா ராணுவ தாக்குதலுக்கு தயாராகி விட்டது என, எங்கள் உளவுப்பிரிவு உறுதியாக தகவல் தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை. சர்வதேச அளவிலான நடுநிலை விசாரணைக்கு தயார் என கூறிவிட்டோம். ஆனால், பொய் காரணத்தை கூறி அடுத்த, 24 முதல் 36 மணி நேரத்துக்குள் இந்தியா போரைத் துவங்க உள்ளது. எங்கள் மீதான எந்த அத்துமீறலுக்கும் தகுந்த பதிலடி தருவோம்,'' என அவர் வீடியோ பதிவிட்டு பேசியுள்ளார்.
மேலும், இந்தியாவை போரில் இருந்து பின்வாங்க செய்யும் முயற்சியாக, பாக்., தரப்பில் ஐ.நா. சபைக்கும் அழுத்தம் தரப்பட்டுள்ளது. ஆனால், 'பாகிஸ்தான் ஒரு மிகவும் மோசமான நாடு' என, இந்தியா தரப்பில் ஐ.நா., சபையில் ஆணித்தரமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பாக்., ராணுவ அமைச்சர் க்வாஜா முஹம்மது ஆசிப், 'போரை அல்லா தடுக்கட்டும்' என கூறியுள்ளார்.
பாக்., தம்பட்டம்
போர் பதட்டம் காரணமாக, கட்டுப்பாடு எல்லைக்கோட்டில் பாகிஸ்தான் படைகளையும், ஆயுதங்களையும் குவித்து வருகிறது. நேற்று இந்தியா போருக்கு ஆயத்தமாகிவிட்டது என்ற பேச்சை கேட்ட உடன், கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் உள்ள பாக்., நிலைகளில் பறக்கவிட்ட அந்நாட்டு தேசிய கொடிகளை கழற்றி வைத்து விட்டு, பாக்., வீரர்கள் உயிருக்கு பயந்து தலைமறைவாகி உள்ளனர்.
அதேநேரத்தில், 'நாங்கள் இந்தியாவின் உளவு ட்ரோன் ஒன்றை சுட்டு வீழ்த்திவிட்டோம்' என, பாகிஸ்தான் தம்பட்டம் அடித்துள்ளது. இஸ்லாமாபாத் ரேடியோ இந்த தகவலை வெளியிட்டாலும், பாக்., ராணுவ தரப்பில் எதுவும் உறுதி செய்யப்படவில்லை.
ராணுவத்தில் எதிர்ப்பு
இந்தியாவுடன் போரை விரும்பாத, பாக்., ராணுவ வீரர் ஒருவர் ராணுவ வாகனத்தில் இருந்து தேம்பி அழும் வீடியோ, சமூக வலைதளங்களில் உலா வருகிறது. பாகிஸ்தானை பொறுத்தவரை, நாட்டு மக்களும், ராணுவ அதிகாரிகள், வீரர்கள் பலரும் போரை விரும்பவில்லை. கடந்த சில நாட்களில் ராணுவ உயர் அதிகாரிகள் பலரும் பணியில் இருந்து விலக முன்வந்துள்ளனர்.

