பா.ஜ., தேசிய செயல் தலைவராக நிதின் நபினை தேர்வு செய்த மூவர்
பா.ஜ., தேசிய செயல் தலைவராக நிதின் நபினை தேர்வு செய்த மூவர்
ADDED : டிச 19, 2025 05:50 AM

சென்னை: அயோத்தி மற்றும் அந்தமானில் நடந்த ஆலோசனையில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் ஆகியோர், பா.ஜ., செயல் தலைவராக நிதின் நபினை தேர்வு செய்த தகவல் வெளியாகி உள்ளது.
பா.ஜ., தேசிய தலைவர் நட்டா பதவிக்காலம் முடிந்ததை தொடர்ந்து, க டந்த ஜனவரியில் புதிய தலைவர் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் தேர்தல் தள்ளிக் கொண்டே சென்றது. ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., இடையே இணக்கம் ஏற்படாததால், தள்ளிப்போவதாக கூறப்பட்டது.
இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், கடந்த 14ம் தேதி பா.ஜ., தேசிய செயல் தலைவராக, பீஹார் அமைச்சர் நிதின் நபின் அறிவிக்கப்பட்டார். இது, பா.ஜ.,விலேயே பலருக்கு ஆச்சரியத்தையும், தலைவர் பதவியை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
நிதின் நபின், செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின்னணி குறித்து, பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
கடந்த ஏப்ரலில் லோக்சபாவில் பேசிய சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், 'உலகின் மிகப்பெரிய கட்சி என பெருமை பேசும் பா.ஜ.,வால், அதன் தேசிய தலைவரை தேர்வு செய்ய முடியவில்லை' என கிண்டல் செய்தார். அதற்கு பதிலளித்த அமித் ஷா, '13 கோடி உறுப்பினர்களில் இருந்து தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டியிருப்பதால் தாமதமாகிறது' என்றார்.
அதை உறுதிப்படுத்துவதை போலவே மாநில தலைவர், மத்திய அமைச்சர் போன்ற பொறுப்புகளில் இல்லாத, மாநில அமைச்சரான நிதின் நபின், தேசிய செயல் தலைவராக்கப்பட்டு உள்ளார்.
கடந்த அக்., 25ம் தேதி பிரதமர் மோடியும், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தும், அயோத்தி ராமர் கோவிலில் தர்ம கொடியை ஏற்றினர். அப்போது, இருவரும் பா.ஜ., தேசிய தலைவர் நியமனம் பற்றி பேசியபோது, நிதின் நபின் குறித்து மோடி கூறியுள்ளார்.
பின்னர், கடந்த 12ம் தேதி, அந்தமானில் வீர சாவர்க்கர் சிலையை, அமித் ஷாவும், மோகன் பாகவத்தும் திறந்து வைத்தனர். அப்போது, நிதின் நபினை தேசிய தலைவராக்க மோடி விரும்புவது குறித்தும், நிதின் நபினின் கொள்கை பிடிப்பு குறித்தும் அமித் ஷா எடுத்து கூறியுள்ளார்.
கடந்த 2023 சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில், பா.ஜ., வெற்றிக்கு நிதினின் வியூகம் எவ்வாறு பலனளித்தது என்பதையும் விளக்கியுள்ளார். அதன் பின்னரே, பா.ஜ., தேசிய செயல் தலைவராக நிதின் நபின் நியமிக்கப்பட்டார். அறிவிப்பு வெளியாகும் வரை மோடி, அமித் ஷா, மோகன் பாகவத் தவிர வேறு யாருக்கும் இது தெரியாது.
கடந்த 2010 ஜூனில், பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டம், பீஹார் மாநிலம், பாட்னாவில் நடந்தது. அதல், குஜராத் முதல்வராக பங்கேற்ற மோடி, இளம் எம்.எல்.ஏ.,வான நிதின் நபினை சந்தித்தார். அன்று முதல் இருவரும், ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருந்துள்ளனர். அதுவே, இப்போது நிதினை தேசிய செயல் தலைவர் என்ற உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

