பலமுறை அறிவித்து விட்டார் அமைச்சர் : மின்வாரிய அதிகாரிகளுக்கு 'டார்ச்சர்'
பலமுறை அறிவித்து விட்டார் அமைச்சர் : மின்வாரிய அதிகாரிகளுக்கு 'டார்ச்சர்'
ADDED : மார் 01, 2024 11:22 PM

எட்டு வீடுகள் வரையிலும் கட்டட நிறைவுச் சான்று தேவையில்லை என்று அமைச்சர் முத்துசாமி அறிவித்து வெகு நாட்களாகியும் அரசாணை வெளிவராத நிலையில் மின் இணைப்புக் கேட்டு தினமும் முற்றுகையிடும் மக்களை சமாளிக்க முடியாமல் மின் வாரிய அதிகாரிகள் திணறுகின்றனர்.
தமிழகத்தில் 2019ல் வெளியிடப்பட்ட தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகளின் படி 12 மீட்டருக்கு அதிகமான உயரம் 8072 சதுரஅடிக்கு மேற்பட்ட குடியிருப்பு, மூன்றுக்கும் அதிகமான வீடுகள் கொண்ட ஒரே கட்டடத்துக்கு கட்டட நிறைவுச் சான்று அவசியம். அந்த சான்று இல்லாவிட்டால் மின்சாரம், குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கக்
கூடாது.
இதனால் தலா ஆயிரம் சதுர அடியில் நான்கு அல்லது அதற்கும் அதிகமான வீடுகள் கட்டியவர்களும் ஆயிரம் சதுர அடியில் வணிகக் கட்டடம் கட்டியவர்களும், மின் இணைப்புப் பெற முடியாமல் அவதிப்படுகின்றனர்.கடந்த நான்காண்டுகளில் மட்டும் இவ்வாறு மின் இணைப்பு பெற முடியாத கட்டடங்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களைத் தாண்டியுள்ளது.
கடந்த ஜன.30ல் நடந்த 'கிரடாய்' மாநாட்டில் பேசிய அமைச்சர் முத்துசாமி, 'எட்டு வீடுகள் வரை கட்டட நிறைவுச் சான்று தேவையில்லை என்பதற்கான உத்தரவு விரைவில் வெளியிடப்படும்' என்று உறுதியளித்தார். பலமுறை இது போல் அறிவித்தும் அரசாணை வெளிவரவில்லை.
நகர ஊரமைப்புத்துறை வெளியிட வேண்டிய இந்த விதிமுறைகளை கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்டதால் இப்போது அதே துறையே இதில் திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. அதை அறிவித்து செயல்படுத்த வேண்டியவர் அமைச்சர் நேரு தான். அவர் இதைப் பற்றி வாய் திறப்பதேயில்லை.
அமைச்சர் அறிவிப்பின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மின் இணைப்புக் கேட்டு மின் வாரிய அலுவலகங்களை தினமும் முற்றுகையிட்டு வருகின்றனர்.அரசாணை வராததால் மின் இணைப்புத் தர அதிகாரிகள் மறுக்கின்றனர்; வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனால் மின் வாரிய அதிகாரிகள் கடும் மன உளைச்சலுக்கு
உள்ளாகியுள்ளனர். -நமது சிறப்பு நிருபர்-

