கோவில் சொத்தை திருடுவது தாயை மணப்பதற்கு சமம்: மலையாள கல்வெட்டு சொல்கிறது
கோவில் சொத்தை திருடுவது தாயை மணப்பதற்கு சமம்: மலையாள கல்வெட்டு சொல்கிறது
ADDED : அக் 25, 2024 04:49 AM

சென்னை : 'கோவில் சொத்தை திருடுவது, தன் சொந்த தாயையே மணக்கும் இழி செயலுக்கு சமம்' என, கடுமையாக விமர்சிக்கும் மலையாள கல்வெட்டு, கேரளாவில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
கேரள மாநிலம் கண்ணுார் மாவட்டம் மாஹே அருகே, செம்ப்ரா என்ற கிராமத்தில், பழமையான முருகன் கோவில் உள்ளது. அதனருகே மண்ணில் புதைந்திருந்த நிலையில், 10ம் நுாற்றாண்டை சேர்ந்த மலையாள வட்டெழுத்து பலகை கல்வெட்டை, முதியவர் ஒருவர் கண்டெடுத்தார். அதன் புகைப்படம், மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டு பிரிவிற்கு அனுப்பப்பட்டது.
அதிலுள்ள தகவல்கள் குறித்து, கல்வெட்டு துறை இயக்குனர் முனிரத்தினம் கூறியதாவது:
இந்த கல்வெட்டு, அந்த முருகன் கோவிலுக்கு தான் சொந்தமானது என்பதற்கான குறிப்புகள் ஏதும் இல்லை. ஆனால், அது கோவில் சொத்து பராமரிப்புகளை வரையறுக்கிறது. அதாவது, வயல் போன்ற ஈர நிலம் ஏதோ அங்கு இருந்துள்ளது. அதேபோல, காய்ந்த தரைப்பகுதி உள்ள நிலமும் இருந்துள்ளது. அவை, கோவிலுக்கு சொந்தமானவை. ஈர நிலத்தில் இருந்து வரும் வருவாயில் பத்தில் ஒரு பங்கை, கோவில் நிர்வாகத்திடம் வழங்க வேண்டும். அந்த வருவாயை, கோவில் செலவுகளுக்கு மட்டுமே செலவிட வேண்டும். இன்னொரு நிலம் குடியேற்றங்களுக்கு உகந்தது.
இந்த கோவில் சொத்துக்கள், ஊராளர் என்ற, கிராம நிர்வாகத்திடம் இருக்க வேண்டும். அதிலுள்ள நிர்வாகிகள் யாரும், அந்த சொத்துக்கு உரிமை கொண்டாடவோ, அதில் வரும் வருவாயை அனுபவிக்கவோ கூடாது. வருவாய் மற்றும் கோவில் செலவுகள் குறித்து, அறங்காவலர்கள் வெளிப்படையான கணக்குகளை நிர்வகிக்க வேண்டும். அதை மீறுவோருக்கு கடும் தண்டனைகள் உண்டு.
கோவில் சொத்துக்கு ஆசைப்படுவதோ, அதை அபகரிப்பதோ, தன் சொந்த தாயை மணந்து கொள்ளும் இழி செயலுக்கு சமம் என, கல்வெட்டில் மிக கடுமையாக விமர்சிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

