சட்டசபை தேர்தலுக்கு முன் ராஜ்யசபா தேர்தல்; எம்.பி., பதவிகளை பங்கு போட காத்திருக்கும் கட்சிகள்
சட்டசபை தேர்தலுக்கு முன் ராஜ்யசபா தேர்தல்; எம்.பி., பதவிகளை பங்கு போட காத்திருக்கும் கட்சிகள்
UPDATED : டிச 24, 2025 06:10 AM
ADDED : டிச 24, 2025 05:11 AM

தமிழகத்தை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.,க்கள், ஆறு பேரின் பதவி, அடுத்த ஆண்டு ஏப்., 1ல் காலியாகிறது. அ.தி.மு.க., -- தம்பிதுரை, த.மா.கா., - வாசன், தி.மு.க., - திருச்சி சிவா, அந்தியூர் செல் வராஜ், என்.ஆர்.இளங்கோ, டாக்டர் கனிமொழி சோமு ஆகியோரின் பதவி காலம் முடிகிறது.
அடுத்த ஆண்டு ஏப்., அல்லது மே மாதத்தில், தமிழக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு முன், ராஜ்யசபா தேர்தல் நடத்தினால் தான், தற்போது உள்ள தி.மு.க., கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் அடிப் படையில், தி.மு.க.,வுக்கு நான்கு எம்.பி.,க்கள் கிடைப்பர். அதேபோல், அ.தி.மு.க.,வுக்கு, இரண்டு எம்.பி., பதவிகள் கிடைக்கும்.
விருப்பம்
சட்டசபை தேர்தல் முடிந்த பின், ராஜ்யசபா தேர்தல் நடந்தால், கள நிலவரம் மாறும். அப்போது எந்த கட்சிக்கு அதிக எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனரோ, அந்த கட்சிக்கு அதிக எம்.பி.,க்கள் கிடைக்கும் சூழல் உருவாகும்.
சட்டசபை தேர்தலில், முதன்முறையாக த.வெ.க., போட்டியிடுவதால், தி.மு.க., - அ.தி.மு.க., அணிகளுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போகும் சூழலும் ஏற்படலாம். எனவே, காற்றுள்ள போதே துாற்றிக் கொள்ள வேண்டும் என்பதால், சட்டசபை தேர்தலுக்கு முன் ராஜ்யசபா எம்.பி., தேர்தலை சந்திக்க, தி.மு.க.,வும் அ.தி. மு.க.,வும் விரும்புகின்றன. இதற்கேற்ப, சட்டசபை தேர்தலுக்கு முன்பே, ராஜ்யசபா எம்.பி., தேர்தல் நடத்த, தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது.
இதற்கிடையில், அ.தி.மு.க.,விடம் உள்ள இரண்டு ராஜ்யசபா எம்.பி., சீட்டுகளை பெற, பா.ஜ., - த.மா.கா., ஆகிய இரு கட்சிகளும் விரும்புகின்றன. அதே சமயம், தே.ஜ., கூட்டணியில் பா.ம.க., - தே.மு.தி.க., - அ.ம.மு.க., ஆகிய கட்சிகளை சேர்க்க, பா.ஜ., மேலிடம் முயற்சித்து வருகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்த, அக்கட்சிகளும் திட்டமிடுகின்றன.
சவால்
அதாவது, பா.ஜ., ஆளும் மாநிலங்களில் இருந்து, ராஜ்யசபா எம்.பி., பதவியை கேட்டு பெற, அக்கட்சிகள் கணக்கு போடுகின்றன. கூட்டணி பேரமாக, ராஜ்யசபா எம்.பி., பதவியை, இக்கட்சிகள் வலியுறுத்த உள்ளன. பா.ஜ., மேலிடமும், இந்த கோரிக்கையை பரிசீலிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
அதேபோல், தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., ஆகிய கட்சிகளும், ராஜ்யசபா எம்.பி., சீட்டுக்கு அடிபோடுகின்றன. எனவே, கூட்டணி கட்சிகளின் நெருக்கடியை சமாளித்து, ராஜ்யசபா தேர்தலை சந்திப்பது என்பது, தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளுக்கும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- நமது நிருபர் -

