த.வெ.க., நிகழ்ச்சிகளில் 'கியூ ஆர்' குறியீடு; அதிருப்தியில் குமுறும் கட்சி தொண்டர்கள்
த.வெ.க., நிகழ்ச்சிகளில் 'கியூ ஆர்' குறியீடு; அதிருப்தியில் குமுறும் கட்சி தொண்டர்கள்
UPDATED : டிச 22, 2025 11:23 AM
ADDED : டிச 22, 2025 04:21 AM

சென்னை: எதற்கெடுத்தாலும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க, 'கியூ ஆர்' குறியீடு கேட்பது, த.வெ.க., தொண்டர்களிடம், அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்காக, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். சமீபத்தில், ஈரோடில் பிரசாரம் மேற்கொண்ட அவர், சேலத்தில் வரும் 30ம் தேதி பிரசார கூட்டத்தில் பங்கேற்க முடிவு செய்து உள்ளார்.
இதற்கிடையே, த.வெ.க., சார்பில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், மாமல்லபுரத்தில் உள்ள, தனியார் விடுதியில் இன்று நடக்கிறது. இதில், பங்கேற்க 'கியூ ஆர்' குறியீடு உடன் கூடிய அனுமதி அவசியம் என, த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த் அறிவித்துள்ளார்.
இதுபோன்று, த.வெ.க., நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து, 'கியூ ஆர்' குறியீடு கெடுபிடி விதிக்கப்படுவதால், சாதாரண தொண்டர்கள் பங்கேற்க முடிவதில்லை. மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்கள் தேர்ந்தெடுத்து அனுப்புவோர் மட்டுமே பங்கேற்க முடிகிறது. இது, தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, த.வெ.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட பிரதான கட்சிகளில் இல்லாத அளவிற்கு, இளைஞர்கள் கூட்டம் த.வெ.க.,வில் உள்ளது. ஆனால், அவர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை. சினிமா விழாக்களுக்கு அழைப்பதுபோல், 'கியூ ஆர்' குறியீடுடன் கூடிய அட்டை வைத்துள்ளவர்கள் மட்டுமே, கட்சி நிகழ்ச்சிகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதனால், சாதாரண தொண்டர்களால் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடிவதில்லை. இதனால், விஜயை பார்க்கும் ஆர்வத்தில், அவருடைய வாகனம் செல்லும்போது, ஆபத்தான முறையில் பின் தொடர்கின்றனர். அதில், சிலர் விபத்துகளில் சிக்குகின்றனர்.
தி.மு.க.,- அ.தி.மு.க., நிகழ்ச்சிகளில், பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன. தொண்டர்கள், பொதுமக்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. த.வெ.க.,வில் இந்த நடைமுறை இல்லை. இதை மாற்ற கட்சி தலைமை முன்வர வேண்டும். இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

