துரோகத்தை தவிர வேறு எதுவும் தெரியாதவர் பழனிசாமி: தினகரன் காட்டம்
துரோகத்தை தவிர வேறு எதுவும் தெரியாதவர் பழனிசாமி: தினகரன் காட்டம்
ADDED : செப் 17, 2025 04:24 AM

சென்னை: “பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., ஆட்சியை காப்பாற்றியது, பா.ஜ., அல்ல; 122 எம்.எல்.ஏ.,க்கள் தான்,” என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் தெரிவித்தார்.
தஞ்சையில் நேற்று, அவர் அளித்த பேட்டி:
'நன்றி மறப்பது நன்றன்று' என்று, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசுவது, 'சாத்தான் வேதம் ஓதுவது போல' இருக்கிறது.
துரோகத்தை தவிர, வேறு எதுவும் தெரியாத பழனிசாமி, வாயில் வந்ததையெல்லாம் பேசுகிறார். அ.தி.மு.க., ஆட்சியை கலைக்க முற்பட்டபோது, பா.ஜ., காப்பாற்றியதாக பழனிசாமி கூறுகிறார்; இது தவறானது .
ஜெயலலிதா மறைவுக்குப் பின், பன்னீர்செல்வம் முதல்வரானார். அவரை மாற்றிவிட்டு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சசிகலாவை முதல்வராக தேர்வு செய்தனர். பதவியேற்பு விழாவை கவர்னர் தள்ளி வைத்தபோது, பன்னீர்செல்வம், 'தர்ம யுத்தம்' நடத்தினார். அதனால், பழனிசாமி முதல்வரானார்.
வேடிக்கை பழனிசாமியை முதல்வராக தேர்ந்தெடுக்க முடிவு செய்த போது, என் பெயரை முதலில் அறிவிக்க வேண்டாம், அப்படி அறிவித்தால் எம்.எல்.ஏ.,க்கள் கையெழுத்து போட மாட்டார்கள். எனவே, அவர்களிடம் கையெழுத்தை வாங்கி கொண்டு அறிவிக்க வேண்டும், என்று சொன்னவர் பழனிசாமி.
அப்போது, சட்டசபையில் நடந்த ஓட்டெடுப்பில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 122 பேர் ஓட்டளித்தனர். அதனால்தான் ஆட்சி தொடர்ந்தது. 18 எம்.எல்.ஏ.,க்களும் முதல்வர் பழனிசாமியை மாற்ற வேண்டும் என்றுதான், கவர்னரிடம் மனு கொடுத்தனர்.
பன்னீர்செல்வத்தின் தர்ம யுத்தத்தின் பின்னணியில் யார் இருந்தனர் என்பதும், 122 எம்.எல்.ஏ.,க்களையும் பழனிசாமிக்கு ஆதரவாக ஓட்டளிக்க வைத்தது யார் என்பதும், அனைவருக்கும் தெரியும்.
ஆட்சியைக் காப்பாற்றிய, 18 எம்.எல்.ஏ.,க்களை கட்சியை விட்டு நீக்கியது பழனிசாமிதான். அப்படிப்பட்டவர் நன்றி மறப்பது பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.
'ஆட்சி அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம். யாருக்கும் பயப்பட மாட்டேன்' என பேசிய பழனிசாமி, இப்போது டில்லி சென்று ஆதரவு தேட வேண்டிய அவசியம் என்ன? செங்கோட்டையனை, கைக்கூலி என மறைமுகமாக குற்றம் சாட்டுகிறார்.
துரோகம் தோல்வி பயத்தில் முன்னுக்கு பின் முரணாகப் பேசுகிறார். வரும் சட்டசபை தேர்தலில், அவர் தோற்கடிக்கப்படுவார். அவருடன் கூட்டணியில் இருப்பவர்கள்தான் இதுபற்றி யோசிக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் துரோகத்தை ஏற்றுக் கொண்டு பழனிசாமியை ஆதரிக்க முடியாது.
அ.தி.மு.க.,வின் 20 சதவீத ஓட்டுகள், பா.ஜ.,வுக்கு பெரிதாக தெரியலாம். வரும் தேர்தலில், அது 10 சதவீதமாக குறைந்து விடும். வரும் தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க., - த.வெ.க., நாம் தமிழர் கட்சி என, நான்கு முனை போட்டி இருக்கும்.
கடந்த, 2024 லோக்சபா தேர்தலில் இருந்து, பா.ஜ., கூட்டணியில் இருக்கிறோம். அதன்பின் தான் கூட்டணியில் பழனிசாமி இணைந்தார். பா.ஜ.,வில் இருக்கும் நலன் விரும்பிகள், 'நல்லது நடக்கும்' என சொன்னதால், கடந்த நான்கு மாதங்களாக அமைதியாக இருந்தோம். அவர்கள் சொன்னது நடக்காததால், வெளியேறி விட்டோம்.
அ.ம.மு.க., கூட்டணி நிலைப்பாட்டை, வரும் டிசம்பரில் அறிவிப்போம். நாங்கள் இடம்பெறும் கூட்டணி கண்டிப்பாக ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.