4 நாள் கூட பாகிஸ்தான் தாக்கு பிடிக்க முடியாது: இது ஆரம்பம் தான் என்கிறார் கர்னல் தியாகராஜன்
4 நாள் கூட பாகிஸ்தான் தாக்கு பிடிக்க முடியாது: இது ஆரம்பம் தான் என்கிறார் கர்னல் தியாகராஜன்
UPDATED : மே 08, 2025 05:08 AM
ADDED : மே 08, 2025 01:05 AM

இந்திய ராணுவத்தின் முன்னாள் லெப்டினன்ட் கர்னல் தியாகராஜன் அளித்த பேட்டி:
பயங்கரவாதிகளால் இந்தியா பலமுறை தாக்கப்பட்டுள்ளது. இனப்படுகொலை, ஹிந்துக்களை குறிவைத்து தாக்குதல் போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. இதற்கெல்லாம் சேர்த்து தீர்த்துக்கட்ட காத்திருந்தோம்.
'கிரிட் ரெபரன்ஸ்'
இதற்கிடையில், பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதற்கான பதிலடியாக, 'சிந்துார் ஆப்பரேஷன்' நடவடிக்கையை, இந்தியா நிகழ்த்தியுள்ளது. குறிப்பாக, 25 நிமிடங்களில், ஒன்பது இலக்குகளில் தாக்குதல் என்பது, நம் முப்படைகளின் ஒருங்கிணைந்த முயற்சியால் மட்டுமே சாத்தியமாகி உள்ளது. தாக்கப்பட்ட ஒன்பது இடங்களுமே பயங்கரவாதிகளின், 'ஹப்' ஆக உள்ளன.
இந்த இடங்கள் அனைத்தும், நம் உளவு அமைப்புகளால் முன்கூட்டியே கணிக்கப்பட்டன. 'கிரிட் ரெபரன்ஸ்' முறையில், அவர்கள் வசிக்கக்கூடிய இடத்தை தேர்வு செய்து விடுவர். ஆனால், போர் நேரம் வரும்போது தான் தாக்க முடியும். இந்த இலக்குகளை, பல இடங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
எனவே, மிக சரியான முறையில் திட்டமிட்டு, ராணுவம் பதிலடி தந்துள்ளது. ஜெய்ஷ் இ முகமது எனும் பயங்கரவாத இயக்க தலைவன் மவுலானா மசூத் அசார் என்பவர், பல்வேறு தாக்குதலில் சம்பந்தப்பட்டவர். ஐ.சி., 814 விமானம் கடத்தலில், அவருக்கு முக்கிய பங்கு உள்ளது. ஆனால், வேறு வழியின்றி விடுதலை செய்யப்பட்டார்.
பின், சட்டசபை மீது தாக்குதல், பார்லிமென்ட் மீது தாக்குதல், பதான்கோட் தாக்குதல், புல்வாமா தாக்குதல் என, பல சம்பவங்களை, இவரது அமைப்பு செய்துள்ளது. 1999 முதல், நாம் சரியான பதிலடி தந்தாலும், அது சிறிய அளவிலேயே இருந்தது. இந்த சிந்துார் ஆப்பரேஷன், நம் மீதான அனைத்து தாக்குதலுக்கும் தகுந்த பதிலடியாக உள்ளது.
பதிலடி
பயங்கரவாதிகள் தலைமையகம், ராணுவ முகாம், பொதுமக்கள் வாழுமிடத்தில் மிக அருகில் இருந்துள்ளது. இவற்றை ராணுவம் குறிவைத்து தகர்த்தியுள்ளது. இது, நமக்கு சிறப்பு மிக்கதாகும். லாகூரில் இருந்து, 30 கி.மீ., தொலைவில் உள்ள முரிட்கே என்ற இடம், லஷ்கர் இ - தொய்பா பயங்கரவாதிகளின் தலைமையிடமாக, 1990ல் இருந்து இயங்குகிறது. இதை குறிவைத்து அடித்தது மிக சிறப்பு. நாம் பயங்கரவாதிகளை மட்டுமே தாக்கி உள்ளோம்.
இதற்கு, மற்ற நாடுகளும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இது, நம் இந்திய வெளியுறவுத் துறைக்கு கிடைத்த பெரிய வெற்றி. எல்லா உலக நாடுகளும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. சீனாவும் எந்த, 'ரியாக் ஷனும்' தரவில்லை.
பாதுகாப்பு கவுன்சிலுக்கு பாகிஸ்தான் சென்றபோதும், கேள்விகளால் அடித்து துவைத்து விட்டனர். உலக நாடுகளின் முன், பாகிஸ்தான் அடி வாங்கி விட்டது. ஆப்பரேஷன் சிந்துார் என்பது, துவக்கம்தான். இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. முழுமையான போர் ஏற்பட்டால் பாகிஸ்தானால், நான்கு நாட்கள்கூட தாக்குப்பிடிக்க முடியாது.
அணு ஆயுதம் எங்களிடம் இருக்கிறது என பாகிஸ்தான் பேசினாலும், நாம் இறங்கி பதிலடி தந்தால், பாகிஸ்தான் வரைபடத்தில் இருந்து மறைய நேரிடும். இவ்வாறு அவர் கூறினார்.
- -நமது நிருபர் -

