ADDED : பிப் 08, 2024 03:25 AM

பண்டைய புகழ்மிக்க பூமியான சோளிங்கரிலும், தேசிங்கு ராஜன் உயிர் நீக்க, அவரது மனைவி உடன்கட்டை ஏற, அவர்கள் நினைவைப் போற்ற ஆற்காடு நவாப் உருவாக்கிய ராணிப்பேட்டையிலும், ஆயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்றைக் கொண்ட சிறப்புமிக்க ஆலயங்கள் அமையப்பெற்ற அரக்கோணம் சட்டசபைத் தொகுதியிலுமாக, 'என் மண்; என் மக்கள்' பாதயாத்திரை பயணம், மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றி நடைபோட்டது.
சொன்னதைநிறைவேற்றிய மோடி
'இனி எதிர்க்கட்சி வரிசையில் கூட இருக்க முடியாது. பார்லிமென்ட் பார்வையாளர் இருக்கையில் மட்டுமே அமரவைக்க, நாட்டு மக்கள் தயாராகி விட்டனர்' என, காங்., குறித்து, பிரதமர் மோடி கூறியிருப்பது,நுாற்றுக்கு நுாறு நிஜமாகப் போகிறது.
கடந்த லோக்சபா தேர்தலின்போது கொடுத்த 295 வாக்குறுதிகளையும் பிரதமர் மோடி நிறைவேற்றியிருக்கிறார். இது தான் வாக்குறுதி கொடுப்போருக்கான அழகு.
ராணிப்பேட்டை தொகுதியில் கருணாநிதி விதைத்த நஞ்சு, தமிழ்நாடு அரசின் குரோமைட் கெமிக்கல்ஸ் நிறுவனம்.
இந்த தொழிற்சாலை பயன்பாட்டில் இருந்தபோது, குரோமியம் கழிவுகளை சரியாக வெளியேற்றாத காரணத்தால், நிறுவனம் மூடப்பட்டது. 28 ஆண்டுகள் கடந்தும், 10 கிலோ மீட்டர் சுற்றளவில் குரோமியம் ரசாயனத்தின் தாக்கம் இருப்பதாக, மக்கள் கூறுகின்றனர்.
இதனால் புற்றுநோய் தாக்கம் இருப்பதாகவும் சொல்கின்றனர்.
கடந்த 2023 நவ., மாதம், தேசிய பசுமைத் தீர்ப்பாணையம், 'குரோமியம் கழிவுகளை அகற்றுவதில், தமிழக அரசு போதிய கவனம் செலுத்தவில்லை' என்று கண்டித்தது.
சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதனுக்கோ, தொகுதி எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கோ, சட்டசபை உறுப்பினர் அமைச்சர்காந்திக்கோ, இதிலெல்லாம் கவனம் செலுத்த நேரம் இல்லை.
இனியும் ஏமாற்றமுடியாது
தமிழகத்திலேயே மத்திய அரசின் திட்டங்கள் மிகக் குறைவாகப் பெற்றுள்ள மாவட்டமாக, ராணிப்பேட்டை உள்ளது.
மத்திய அரசின் திட்டங்களைத் தொகுதிக்குக் கொண்டு வருவது மட்டுமே, பார்லிமென்ட் உறுப்பினருடைய பணி. ஆனால், அரக்கோணம்எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு, தொகுதி பற்றி எந்தக் கவலையும் இல்லை.
சமீபத்தில் ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில், இவர் 1,250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஜெகத்ரட்சகன், டி.ஆர்., பாலு இருவரின் சாராய ஆலைகளில் இருந்துதான் 'டாஸ்மாக்' கடைகளுக்கு, 44 சதவீதம் மது வகைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
கடந்த ஆண்டு நடந்த, 'நீட்' தேர்வில், அகில இந்திய அளவில் முதல் மாணவர்களாக, தமிழக மாணவர்கள் தேர்ச்சிபெற்றிருக்கின்றனர்.
முதல் 10 இடங்களில் நான்கு பேரும், முதல் 50 இடங்களில், 10 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.
ஏழை, எளிய, சாமானிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவ -- மாணவியரின் மருத்துவக் கல்விக் கனவு நிறைவேறி வருகிறது.
தமிழக மாணவர்களை, இனியும் நீட் தேர்வை வைத்து ஏமாற்ற முடியாது.
எந்த உரிமையும் இல்லை
தமிழக அரசை நடத்த, கருவூலத்தில் பணம் இல்லை. ஏனென்றால், அரசு 8 லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளிக்கிறது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்து 32 மாதங்களில், 2.69 லட்சம் கோடி ரூபாய் புதிய கடன் வாங்கியுள்ளது. தமிழகத்தின் ஒவ்வொரு ரேஷன் அட்டை மீதும், ஒவ்வொரு குடும்பத்தின் மீதும், 3 லட்சத்து 20,000 ரூபாய் கடன் சுமை இருக்கிறது.
இன்னும் ஒரு ஆண்டில், அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கவே பணம் இல்லாத நிலை வரப் போகிறது. அனைத்துக்கும் காரணம், தி.மு.க., ஆட்சியில் எல்லா துறைகளிலும் ஊழல்.
பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி, மத்திய அரசு, கிராம பஞ்சாயத்து செயல்பாட்டுக்காக, நேரடியாக அனுப்பிய நிதியை, தி.மு.க., அரசு கேட்க, எந்த உரிமையும் இல்லை.
முதல்வர் ஸ்டாலின், பஞ்சாயத்து நிதியை பறிக்க முயற்சிக்காமல், ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட தி.மு.க.,வின் கோடீஸ்வரர்களிடம் நிதி வாங்கி கட்சியையும்; ஆட்சியையும் நடத்தட்டும்.
'முதல்வர் ஸ்டாலின், 10 நாட்கள் ஸ்பெயினில் தங்கியிருந்தது முதலீட்டை ஈர்க்க' என்ற தி.மு.க.,வினரின் கட்டுக்கதை மக்களிடம் எடுபடவில்லை.
பயணம் தொடரும்...

